Sunday, March 07, 2010

சுவர் கடிகாரம்

உறக்கம் வரவில்லை.அனால் படுக்கும் நேரம் தான்.
மணி எத்தனை என்று பார்க்கலாம் தான் அந்த பச்சை
நிற சுவர் கடிகாரத்தில்.ஆனால் சில வருடங்களாய் அதில்
மணி பார்ப்பதை விட்டிருந்தேன்.கண்களை மூடிக் கொண்டேன்.
அங்கே அக்கடிகாரத்தின் டக் டக் சத்தமும், என் இதயத்தின் லப்டப்
சத்தம் தவிர வேற எந்த சத்தமும் இல்லை.

என் குடும்பம் மிகச் சிறியது.அம்மா அப்பா நான்.
அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதை நான் ஆறு வயதிருக்கும் போதிலிருந்தே என் அப்பா அடிக்கடி
சொல்லுவார்.அம்மா அப்பாவை திட்டுவார்கள்.அப்பா கண்டு கொள்ள மாட்டார்.
அவனுக்கு தெரியனும்டி மட்டும் சொல்லுவார்.தொலைக்காட்சி பெட்டியில்
பாடல் காட்சிகள் வரும்பொழுது அப்பாவையும் , அம்மாவையும் கற்பனை
செய்து பார்ப்பேன்.அம்மா கேட்பார்கள்.ஒன்றுமில்லை என புன்னகைப்பேன்.

அப்பா அம்மா சண்டையிட்டு நான் பார்த்ததாய் நினைவில் இல்லை.
அவ்வளவு அன்பாய் இருப்பார்கள்.அவர்களின் ஒற்றை வானம் நான்.
என்னை விட்டு விலகியதே இல்லை.அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்
அப்பா அம்மாவை முத்தமிடுவார்.அம்மா ...'பையன் முன்னாடி முத்தமிடாதீர்கள் என்று
எத்தனை தடவை சொல்லிருக்கேன்' என்று செல்லக் கோபம் காட்டுவார்.பையன் முன்னாடி
சத்தம் தான் போடக் கூடாது...முத்தம் போடலாம் என்பார் அப்பா.

பாருங்கள்.எப்பவுமே இப்படித்தான்.அப்பா அம்மா என்றாலே நினைவுகளில் மூழ்கிப்
போய்விடுவேன்.நான் கண்மூடி நினைத்து பார்க்க நினைத்த விசயமே வேறு.
ஆம்.அந்த பச்சை கடிகாரம் தான்.காதல் திருமணம் என்பதால் அதிக கூட்டம்
வரவில்லையாம்.ஏன் இருவரின் பெற்றோர் கூட வரவில்லையாம்.அப்பாவின்
நெருங்கிய நண்பர் ஒருவர் தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தாராம்.
அவர் குடுத்த திருமணப் பரிசு தான் அந்த பச்சைக் கடிகாரம்.அப்பா ..திருமண புகைப்படம்
கூட வீட்டில் மாட்டியதில்லை.அக்கடிகாரம் மட்டும்தான் நம் காதலுக்கும் என் நட்புக்கும்
ஒரே சாட்சி என்று சொல்லிவிட்டாராம்.

அக்கடிகாரம் இரண்டு கண்டங்களில் இருந்து தப்பியதாக
அம்மா அடிக்கடி சொல்லுவார்.ஒன்று என்னிடம்.ஒரு பொருளையும் நான் உடைக்காமல்
விட்டு வைத்தது இல்லையாம்.அப்பா அவருக்கு திருமண நாள் பரிசாய் வாங்கிக்
குடுத்த அந்த கண்ணாடி தாஜ்மஹாலை கூட உடைத்து விட்டேனாம்.அம்மா
துடித்துப் போய்விட்டாராம்.ஆனால் என் முன்னால் அழுததாயோ , அதற்காக
என்னை அடித்ததாகவோ எனக்கு நியாபகமில்லை.ஆனால் அதற்குப் பிறகு
அப்பா திருமண நாள் பரிசு வாங்குவதில்லை.அப்பா அம்மாவை முத்தமிட்டு பின்
இத எப்படி என் பையன் உடைக்கிறான் பார் என்று சிரிப்பார்.

அடுத்த கண்டம் 1984 இல் வந்த அந்த வெள்ளம் தானாம்.
எல்லை மீறிய வெள்ளம் எல்லா பொருள்களையும் அடித்து
போய்விட்டதாம்.அப்பா அம்மாவின் திருமண புகைப்படம் அடங்கிய
அந்த இரும்பு பெட்டி உட்பட.எனக்கும் அந்த வருத்தம் நிறைய இருக்கிறது.
எனக்கு மங்கலாய் நியாபகம் இருக்கிறது அந்த புகைப்படங்கள்.
அழுகை,வருத்தம்,சந்தோசம்,எதிர்பார்ப்பு,கனவு,ஆசை,அப்பா
எல்லாத்தையும் தாங்கிய அம்மாவின் கண்கள் அந்த புகைபடத்தில் அப்படியே
அச்சடிக்கப் பட்டிருக்கும்.ஏதோ உயரத்தில் மாட்டியிருந்ததால் அந்தக் கடிகாரம்
மட்டும் தப்பியது.

அப்பா இறந்த அன்று ...எஞ்சியிருந்த அழுகையும் வெளியேற்றி விட்டு
விட்டத்தை பார்த்து பின் அக்கடிகாரத்தை பார்த்தேன்.அந்த கடிகாரம் ஓடாமல் நின்றிருந்தது.அதன் பிறகு
அம்மா அடிமனதிலிருந்து சிரிக்கவே இல்லை.சில வருடங்களில் அம்மாவும்
இருந்து விட்டார்.அன்றுதான் அந்த கடிகாரத்தை சரி செய்தேன்.
அன்றிலிருந்து ஓடும் இந்த கடிகாரம் இன்னும் நிற்கவில்லை.
அன்றையிலிருந்து தான் இந்த கடிகாரத்தில் நான் மணி பார்ப்பதை
நிறுத்தியிருந்தேன்.நான் நொடி முள்ளாகவும், அம்மா அப்பா பெரிய சிறிய
முற்களாகவும் எண்ணிக் கொண்டேன், எண்ணிக் கொண்டிருக்கிறேன்...
எண்ணிக் கொண்டிருப்பேன்....

செல்வேந்திரன்
Monday, February 22, 2010

முகம் நிமிரும் நொடி...இத்தனை தூரம் உருண்ட போதிலும்
இருமலைகள் கடந்த போதிலும்
பிரிவுபயம் காரணமாய் பெருமூச்சாய்
போகாமல் மௌனமான சக்கரக்காற்று...

இருகைகளும் அவளிடுப்பை சுற்றும்
தவம் பலித்த மகிழ்ச்சியில்
ஒற்றை காலை தரை பதித்து
ஒரு பக்கமாய் சரிந்தது அவ்வண்டி

அவள் கைப்பட்ட வாக்கியம் ஒன்று
கம்பிவழி மின்சாரமாய் காதடைந்து
கவியும் இசையும் கலந்த
பாடலாய் அவளிதயத்தில் இறங்கியது

மேற்புறமாய் முகம் தூக்கும்போது
வலப்புறமாய் தன்முகம் திருப்ப
தயாராய் இருந்த கணத்திலெடுத்த
புகைப்படம்தான் நீங்கள் மேலே பார்த்தது.....

Wednesday, February 03, 2010

சிறு ஒளி ! பெரு மகிழ்ச்சி !!கடல்தாயின் கருவில் உதித்து
அலைமடியில் மெதுவாய் தவழ்ந்து
மணலேறி மரமேறி உச்சிவந்த
கானல்நீர் வெளிச்சம்

வானத் திரை தினம்விலக்கி
அங்குமிங்கும் ஆடும் குழந்தைக்கு
உண்ணுஞ் சோறின் நிறங்காட்டும்
கண்குளிரும் வெளிச்சம்

காற்று வந்து கலைத்திடுமென
அவசரத்தில் மேல்நோக்கி பெய்த
மேக மழை துளிகளின்
கண்ணுறுத்தா வெளிச்சம்

உலகம் போற்றும் இவ்வெளிச்சங்கள்
ஒன்றுமில்லை ! பிறந்த நாளில்
காதலியின் மகிழ்முகம் காட்டி
மரித்துவிட்ட மெழுகுவர்த்தியின் முன்பு....

Friday, January 22, 2010

தவற விட்ட பயணச்சீட்டுபேருந்து பயணத்தில்
வேண்டுமென்றே உரசியவனை
வேகத்தில் முறைத்தும் வைத்தாள்
வேதனையை மறைத்தும் வைத்தாள்

மடித்த புடவை மடிப்பினை
மறைக்குமிடம் அனுப்புமுன்
முதுகினில் முத்தமிட்டே முன்புறம்
உதவும் கையினை நினைத்துவிட்டாள்

தனை அணைக்க தானில்லை
பொங்கியது போதுமென
அடுப்பினில் வெந்த பாலை
அமைதியாய் அனைத்து வைத்தாள்

பெற்றவரின் பெருமையை நினைவிலேற்றி
ஒற்றை கடிதமதை நிராகரித்து
உரிய வரனின்று அமையாமல்
ஊமையாய் அழுது வைத்தாள்

வெயில் பிரதேசமும், குளிர் பிரயாணமும் :நம்மூர் மழையினை நியாபகங் கொண்டு
வானத்தின்கீழ் வலக்கை நீட்டியவன்
கடனாளிக் குளிரின் பனிதூவலை
உள்ளங்கை வாங்கியுயரே எறிகிறேன்

வாரத்தில் சிலநாள் வானமே பார்த்திராதவன்
தினமுறங்கு முன்னும் விழித்த பின்னும்
weather.com விசாரித்தே
வேலைக்கு விரைகிறேன்

வெள்ளத்தில் வீடே மிதந்த போதும்
வேடிக்கையாய் பாம்படித்தவன் வெள்ளை
பனியில் மூழ்கிய காரினை
விரைக்க விரைக்க புதையலெடுக்கிறேன்

மெலிதான மழையில் கண்மூடி
உடல்நனைந்து அமுதம் குடித்தவன்
மிதமான பனித்தூறலில் உடல்மூடி
கண்திறந்து குளிர் உண்கிறேன்

அதிகமாய் பெய்து பலிகள்சில
ஆனபோதும் எம்மழையை கடுஞ்சொல்
கூறிய தில்லை
மழைக்கு அடுத்ததாய் ஆகிவிட்ட
மமதையில் நிற்காமல் நீடிக்கிறது
இரண்டாம் பிள்ளை....