Monday, December 18, 2006

அம்மா !

இவ்வார்த்தை உச்சரிக்கப் படுகிறதோ ? இல்லையோ
உணரப்படாத உயிரினம் உலகில் இல்லை

மழையாக ! காற்றாக !
கடலாக ! மரமாக !
பனித்துளியாக பிறக்க ஆசைப்பட்டேன்

அவைக்கெல்லாம் தாயில்லை என்ற கணமே
தூக்கியெறிந்தேன் என் அற்ப ஆசையை

இறந்தபின் சொர்க்கமோ ? நரகமோ ?
கவலையில்லை கண்திறக்கும் காலம்வரை
வசித்தது சொர்க்கம்தான்

அம்மா ! உனக்காக நீ வைத்துக் கொண்டது
உன் பெயர் மட்டும்தானா ?
இன்றுவரை அணிகலன் அணியும்

ஆசை உனக்கில்லை ! ஆசை வேண்டாம் இனிமேலும்
தங்கத்திற்கோ ! வைரத்திற்கோ அத்தகுதி இன்னும் வரவில்லை

நீ பின்பற்றும் திருக்குறள் நான்கைந்து
நான் பின்பற்றும் ஒரே திருக்குறள் அது நீயன்றோ

உன் தாய்தந்தை சென்றடைந்தது சொர்க்கமா ? நரகமா ?
கவலை வேண்டாம்..எங்களின் சொர்க்கத்தை படைத்துவிட்டு
அவர்கள் நரகமா ?சென்றிருக்க முடியும்

நத்தை கூட அவ்வப்போது
கூட்டை விட்டு எட்டிப் பார்க்கும்
என்றேனும் ஓர் நாள்
வீட்டை விட்டு உன்மனம் சிந்தித்திருக்குமா

எனக்கான வேலை கிடைத்தவுடன்
உனக்கோய்வு கொடுத்திருப்பேன்
பின்புதான் யோசித்து அமைதியானேன்
அலுவலகம் இன்னுமோர் பிறந்த வீடல்லவா..

வேலைச்சுமையுடன் வீட்டுச்சுமையையும் கரைத்த இடமல்லவா !

முப்பத்தெட்டு ஆண்டுகளில்
முடிவடைந்தது உன் பணிக்காலம்
விடுமுறையில்லா பணியொன்று
நீ தொடர காத்திருக்கிறது
தாய்மையை தவிர வேறென்ன என் தாயே !


காலத்தின் கட்டளைக்கெல்லாம் கீழ்படியாதே
முதுமை ! இனி காலத்திற்கு மட்டும்தான்

ஊட்டி வளர்த்த மரத்தை
தாங்குமாம் ஆலவிழுதுகள்
விருதுகள் பலபடைக்காவிட்டாலும்
விழுதுகளாய் வாழ்ந்திடுவோம்

உன் சிம்மாசனத்தின் நான்கு
கால்கள் இனி நாங்களே


உன்னுடலை ஓர்நாள் மண்மூடும்
ஒரு அறை ! அந்த கருவறை திறந்து மட்டும் காத்திரு
கண்டிப்பாய் ஓர்நாள் நானும் வந்து சேர்வேன்..Friday, November 10, 2006

கவிதை எழுத வருவதில்லை !

அண்ணன் மழலையை கொஞ்சும்போது

அன்றைய மழையை கொஞ்சிக்

கவிதை எழுத வருவதில்லை !

உறவுடன் ஒன்றாய் உண்ணும்போது

கொரிக்கும் அணிலின் அழகுகண்டு

கவிதை எழுத வருவதில்லை !

கடுங்குளிரில் முகம்போர்த்தி உறங்காமல்

முகமூட மேகமிலா நிலாக்கண்டு

கவிதை எழுத வருவதில்லை !

ஐந்துநாள் அழுவலக ஐக்கியத்தில்

ஆறாம்நாள் சிந்தித்துச் சிலவரி

கவிதை எழுத வருவதில்லை !

கவிஞனாய் வாழ நினைத்தாலும்

கடமையில் மூழ்கி உழைக்கும்போது

கவிதை எழுத வருவதில்லை !

ஒரு கவிதை எழுத வருவதில்லை !Friday, November 03, 2006

அன்னை


ஆர்வமா யமர்ந்தேன் அறையினிலே
அன்னைக்காய் ஓர் கவிதையெழுத‌
'அன்னை' தலைப்பெழுதி அடுத்தவரி
எழுதுமுன் அறைக்குள் அம்மா !

தாங்காதடா தாயின்மனம்
உன்னோட கண்ணுக்கும்
என்னோட கண்ணுனக்கும்
ஏதும் ஆகுமென்றால்

அவளேற்றிய விளக்கையும்
என்‍தலைகோதிய வலக்கையும்
பார்த்து பார்த்து ஆழ்ந்தது
என்மனம் சிலகணம்

முதல்வரிக்காய் மீண்டும் மூழ்கியபோது
மீண்டும் அறைக்குள் அம்மா

வேர்க்குதாப்பா ? என்றாள்
என் வியர்வையை துடைத்தபடி
வேர்க்கலம்மா ? என்றேன்
என் வியர்வையை மறைத்தபடி

முதல்வரிக்காய் மீண்டும் மூழ்கியபோது
மீண்டும் அறைக்குள் அம்மா

ப‌திய‌ம் போட்ட‌ செடியும்,
ம‌தியம் சாப்ட‌ வ‌யிரும்
காய‌க்கூடாதுடா கைக‌ழுவு
சீக்கிர‌ மென்றாள்.

வ‌யிறாற‌ உண்டுவிட்டு தாயின்
ம‌டியாற‌ த‌லை சாய்த்தேன்
'அன்னை' த‌லைப்பு ம‌ட்டுமே
க‌விதையாய் அக் காகித‌த்தில்..

அன்புடன்
ந‌ வ‌ செல்வேந்திர‌ன்

Saturday, October 14, 2006

புறப்படுடி என் பொண்டாட்டியே !

பதினாலு வருசத்துக்கே
புராணம்தான் பொங்குதடி
பரம்பரையா வாழுறோமே
பிராணனைதான் போகுதடி

சிங்கம் புலி கரடி கூட‌
பட்டணம்தான் போகுதடி
வேடிக்கை காட்டிவிட்டு
கூண்டுக்குள்ளே தூங்குதடி

புளிமூட்டை கணக்கா நாம
பூச்சிக‌டியில் வாழுறோம்டி
எலிவேட்டை இனிபோதும்
எந்திரிச்சி கூட‌ வாடி

ச‌லுகையெல்லாம் அர‌சாங்க‌ம்
கொடுத்துத்தான் பார்குதடி
மூக்கொலுகும் புள்ளைய‌த்தான்
முன்னேத்த‌ கூட‌வாடி

காடு,மலை அருவியெல்லாம்
பத்திரமா இருக்குமடி
கால்வலிக்க நடந்து போயி
காலைக்குள்ள சேர்வோமடி

ந‌க‌ர்ந்தாதான் ந‌க‌ர‌ம்
இப்ப‌ வ‌ரும்
ந‌க‌ர‌ல‌னா நாக‌ரீக‌ம்
எப்ப‌ வ‌ரும்

எப்பாடு ப‌ட்டாவது
எழுந்துரிச்சி நிப்போம‌டி
இழிசாதிக்கு பொற‌ந்த‌ ப‌யலை
இனிசாதிக்க‌ வைப்போம‌டி

Thursday, September 28, 2006

நினைவுகள் வலியவை ! நினைவுகள் வலி அவை !
நிகழ்கால நினைவுகளுக்கே
நித்தம் கதறுகின்றேனே
எதிர்கால நிகழ்வுகளுக்கு
சித்தம் சிதறிடுவேனோ

காலம் கடந்து
மணம் முடித்தபின்
கலவியில் உந்தன் முகமும்..

பத்தாண்டு பின்பார்க்கும்
பழைய பெட்டியில்
உந்தன் புகைப்படமும்...

நிமிரயியலா வயதினிலே
நியாவிலை கடைவாசலிலே
அடையாள அட்டையில் இல்லாத
உந்தன் பெயரும்...

சாதல் அனுபவிக்கும் வயதில்
காதல் அனுபவம் கேட்ட பேரப்
பிள்ளைகளுக்கான என் பதிலும்...

நிகழ்கால நினைவுகளுக்கே
நித்தம் கதறுகின்றேனே
எதிர்கால நிகழ்வுகளுக்கு
சித்தம் சிதறிடுவேனோ

Thursday, September 21, 2006

உயிர்மெய் வலிகள்

நால்வகை பருவம் மாறினாலே
தினங் கதறும் உலகமே
நாளையில்லா உருவம் மாறியதால்
தினங் கதறும் எம் உணர்வுகளே !

சரியென்று நினைத்து தவறாய்
போன புணர்ச்சி விதி
பிழையென்றெண்ணி உன் பார்வைச்
செருப்புகளால் வேண்டாம் உணர்ச்சிமிதி !

தாங்கிடுவோம் இயற்கையாய்
உண்டான உடல் ஊனம்
தாங்கோமே செயற்கையாய்
எமக்களிக்கும் மன ஊனம் !

அன்னையின் மார்பிரண்டு
ஆண்பாலாய்,பெண்பாலாய் ஆகியதேன்
அதையருந்தி உயிர் வளர்த்த
நானின்று அரவாணியாய் ஆனதேன் !

என்னினம் தவிர எவ்வினமும்
பார்த்ததில்லை எனை ஏளனமாய்

குறைகள் பலவற்றை செய்தாலும்
நிறையொன்றை நீவீர் செய்தீரே
கழிப்பறை கட்டிப் பிரித்தெம்மை
இயற்கையோடு இணையச் செய்தீரே

உலகின் ஆண்பாதி, பெண்பாதி இல்லாமல்
உடலின் ஆண்பாதி, பெண்பாதி ஆகிருந்தால்
அபலைகளின் கற்பினை விட்டுவிட்டு
அவனையே கற்பழித்து அடங்கிருப்பான் !

புன்னகையை பூக்கவும் வேண்டாம்
அருகருகே அமரவும் வேண்டாம்
நின்றருகே பேசவும் வேண்டாம்
பீச்சாங்கை காசும் வேண்டாம்

இரக்கத்துடன் ஒன்று செய்யும்
இழிபார்வை நிறுத்தது போதும் !

- ஓர் அரவாணியின் ஆதங்கம்

Thursday, September 07, 2006

நீ தமிழே !

நீ தமிழே ! இதை
விளக்கும் என் தமிழே

உன்னால் என்னுயிர் வாழும்
என்னுயிர் நீ ! ஆதலால்
என் மெய்யும் வாழும்

உயிர், மெய் வாழத்
தேவை தமிழே !
என் உயிர், மெய்
வாழத் தேவை நீ தமிழே !!

Monday, August 28, 2006

இதுதான் காதலோ !
அன்று பகல் முழுதும் அதிகமாய் வெயில் பெய்துவிட்டதால் அதற்குப்
போட்டியாய் மாலை நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது..

திடீர்மழை கண்டு அனைவரும் மறைவிடம் தேட
அவன் மட்டும் சாலையில் நடக்க ஆரம்பித்தான்..

தான் கழுவிவிடும் தார்ச்சாலையை இவன் நடந்து
அழுக்காக்கியதற்காய் கோபித்த மழைத்துழிகள்
அவன் தலையை கொட்டித் திட்டத் தொடங்கின….

உடல் கருப்பாய் இருந்தாலும் அழுகுப்பெண்
கைப்பிடித்ததால் தலைக்கு மேல் ஆட்டம்
போட்டபடியே போனது ஒரு குடை..

கல்யாணத்திற்கு வரச்சொன்னால் காதுகுத்துக்கு வந்த கதையாய்
இருப்பதாக தன்மேல் பொழிந்த மழையினை
சலித்தது ஒரு வைக்கோல் குவியல்...

“காலையில் வீட்டுக்காரன் தண்ணிர் இல்லை எனத்திட்டுவானே”
இளநியில் மழை நீர் கொஞ்சம் நிரப்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தது
ஒரு தெருக்கோடி தென்னை மரம்...வாசலில் தேங்கிய நீரைக் கண்டு கணவன் எப்படி வருவாரோ ?
எனக்கவலை ஒருபுறமும், காலையில் கோலம் போட வேண்டாம் என்ற சிறுமகிழ்ச்சி
ஒரு புறமும் கொண்டு நின்றிருந்தாள் தெருவினிலே உள்ள பெண்ணொருத்தி…


"மரம் ஒழுகுதுன்னா… கேக்குறீங்களா "..
சீக்கிரம் வேறு வீடு பாருங்க
என ஆண்காகத்தை திட்டியது அதிகார பெண்காகம்..

பகல் முழுதும் அழுக்கை ஆடையாய் அணிந்திருந்த மர இலைகள்
யாரும் கவனிக்கவில்லை என ஆடையை களைந்துவிட்டு குளித்துக்
கொண்டிருந்தன..இவனை கண்டதும் வெட்கத்தில் தலை குனிந்தன

இவ்வளவு நிஜங்கள் கண்முன்னே நிகழ்ந்தாலும்
அதையெல்லாம் கடுகளவும் கண்டுகொள்ளாமல்
பகல் முழுதும் அவளுடன் பேசியிருந்தும்,
இரவு பேசப் போவதை நினைத்து கற்பனை செய்தபடியே
சாலையில் சாவகாசமாய் நடந்திருந்தான்...

Thursday, August 03, 2006

குருவிக்கூடு !
சொந்தமிலா பூமியிலே
சொந்தமான வீட்டினிலே
சோறமுதை உண்டுவிட்டு
தெருவினிலே நடந்து வந்தேன்

கண்களின் வேலையையும்
கால்களிடம் விட்டுவிட்டு
பகலிலே பார்வையின்றி
பலதொலைவு நடந்து வந்தேன்

ஊரொதுங்கி ஆறு போக
ஊரொதுங்கும் ஆறு போனேன்
ஊரழகை ரசிக்க வந்த
ஆறழகை ரசித்திடவே

பாறையொன்று அங்கு உண்டு
அதில் பார்த்து நின்றேன்
புவியழகு கண்டு!
பகலவனின் புகைபடத்திறனை
பனை நிழலாய்
உலரக் கண்டு !

தூக்கு போட்டு சாகும்
துணிவில்லா மனிதர் மத்தியிலே
தூக்கு போட்டு வாழும்
தூக்கனாங்குருவி பனை மரத்தினிலே

ஆடிமாத காற்றினிலே
ஆவணியும் நகர்ந்திடுமே
பாடிவரும் குருவி நீயே
பக்குவமாய் வீடமைத்தாய்

காற்றடிக்கும் திசையறிந்து
பனைமரத்தின் மறுபுறத்தில்
கூட்டினை அமைத்து
வாழும் குட்டிக்குருவியே

உந்தன் அறிவினை
மலைத்து விழுவேன்
மனிதன் சார்பிலே

கடலும்தான் வாசல் தேடாதா ? அதில்
அலைகளும்தான் கோலம் இடாதா ?
அதன் வாசலிலே விட்டைக் கட்டி
அழுது நின்றோம் பிணத்தைக் கட்டி !

Sunday, July 23, 2006

விதவை !

வெள்ளைக் காகிதத்தில் ஒற்றையாய்
ஓர் கவிதை ! வாசகன் இல்லாமல்.

வீட்டிலுள்ள தலைவன் புகைப்படம் கூட
அவன் நினைவினை அதிகமாய் தீண்டியதில்லை..

சாலையோர பூக்கடையும்,
சேலையோர சிறுமுடிச்சும்,
காலை நேர கடுங்குளிரும்,
மாலை நேர காத்திருப்பும்

கண்டு கொல்லும், கண்டு கொள்ளா(த)
முடிச்சவிழ்ந்த மொட்டை

அடுத்த மாத மண அழைப்பிதழ்கள்
அடுக்களையில் அழ வைக்கும்..

ஆடி மாதம் ஆண்டுகளாய் ஆகி
படுக்கையிலே முகம் நனைக்கும்

நெறி தவறா நடந்தாலும்
நெடியுடைய ஊர் பேச்சை
தாரை மிதித்து நடந்திடுவாள்
ஊரை சகித்து தலை நிமிர்வாள்

கை முளைத்து, கால் முளைத்து
கடைக்கு செல்ல தந்தைக்காய்
காத்திருக்கும் குழந்தை உள்ளம்
தாயிடமே கேட்டிடுமே ! செத்திடுவாள் சில நிமிடம்...பிள்ளையினை வழியனுப்பி
தொல்லைகளை தனுள் அமிக்கி
நேரம் வரக் காத்திருந்து
பிள்ளைக்கு மணம் முடிப்பாள்

குழந்தைகள் காதல் செய்யும் முதலிரவில்
மனமும், உடலும் ஒன்றாய்
கட்டிலில் உறங்கும்
அவளுக்கும் அது மீண்டதோ(மோ)ர் முதலிரவு !!


அன்புடன்,
செல்வேந்திரன்.

Saturday, July 08, 2006

[காட்சி - அருவி விழும் பாறையில் அழகி அமர்ந்திருக்கிறாள் ]

அழகற்ற அருவி அமர்ந்து அமர்ந்து..
அழகற்று போன என் மேல் அமர்ந்து
அழகாய் ஆக்கிய அழகியே !

சீக்கிரம் எழுந்துவிடு !
பனியாய் நான் உருகுவதற்கு முன் !!

நான் உருகிவிட்டால் அருவிகள்
ஆறாய் ஆகி உன்னை அள்ளிச்
சென்றிடுமோ என்ற அச்சத்தில்
கல்லாய் அமர்ந்திருக்கிறேன் !!

சில்லென்று ஒரு பயணம் !!நீண்ட நாள் வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையில், முதன்முதலாய் சேரும் நாள் வெள்ளியன்றாய் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்களில் அவனும் ஒருவன்.
ஆம் ! நீச்சல் தெரியாமல், ஆற்றில் மீண்டவனுடைய அகமகிழ்ச்சியில் அலுவலகம் விட்டு வெளி நடந்தான் ஓர் அழகான வெள்ளிக்கிழமையன்று.

காதுகளை இசையால் அடைத்துக் கொண்டு...
கண்களை இமையால் விசிறிக் கொண்டு…
விரைவாய் நடந்து வந்தான் Full Stop க்கு. Bus=Full நாமறிந்த வழக்கம்தானே..

புத்தம் புதிய(இருபது வருடங்களுக்கு முன்) பேருந்து ஒன்று சற்று முன்னிருந்த
Traffice signal யையும், மக்கள் signal யையும் மதிக்காமல் சில தொலவு தள்ளி நின்றது.பொங்கிய பாலாய் பயணிகளும், பாத்திரமாய் பேருந்தும் நகரப் புழுக்கத்திலும், நகரமுடியாப் புழுக்கத்திலும் சூடாய் இருந்தார்கள்.

கூட்டதில் எவன் ஏறுவானென மனதிற்க்குள் கூவியவன் அழகாய் அருகில் நின்றவள் அதில் ஏறியதால்தானும் ஏறினான்.பயணச்சீட்டை வாங்க காசை
தேடிக் கொண்டே அவள் முகத்தை வெளிச்சத்தில் முழுதாய் ..
.இல்லை ! இல்லை ! முழு நிலாவாய் பார்த்தான்.

தேடித் தேடி காசு கிடைத்தது ! ஆனால் அவன் மனது தொலைந்தது..
"வடபழனி ஒன்று" என்று அவளிடம் காசை நீட்டினான்.

சிரித்தாள் ! அவள் சிரித்தாள் ..
முழித்தான் ! இவன் முழித்தான் ...

சில நொடியில் மூளை அவன் தலையில் தட்டியது...பின் திட்டியது..
"மனது தானே தொலைந்தது .. நானுமா ??"...ஏறிய இடத்திற்க்கே
Ticket கேட்டால் எவள்தான் சிரிக்காமலிருப்பாள் ?...

"Sorry...வேளச்சேரி ஒன்று.."

சிரித்தபடி வாங்கி கொடுத்தாள்.மற்றவர்களுக்காய் எடுப்பதாய் ஏழெட்டு tickets எடுத்தான்.வெளியே இருட்டாக இருந்ததாலும், இயற்கை காட்சி இல்லாததாலும் அவளை மட்டும் பார்த்து வந்தான்.அவள், இவன் பார்ப்பதை அனைத்து முறையும் பார்த்த போதிலும், இவன் இரண்டு முறை மட்டுமெ மாட்டிக் கொண்டதாய் நினைத்திருந்தான்.

இப்பொழுதான் கவனித்தான் நிலவை சுற்றிய விண்மீன்களை போல அவன் வயதினர் பலர் அவளையே பார்த்திருந்தனர்.பேருந்தில் கூட்டமாய் உடல்கள் பயணம் செய்தாலும், உள்ளங்கள் ஒன்றாய் பயணிப்பதில்லை...ஆனாலும், சன்னலோரப் பயணிகள் மட்டும் வான்னிலவை ரசிப்பார்கள் ஒருவருக்கொருவர் அறியாமலே...அதைப் போல வட்டமாய் அப்பெண்ணிலவை பார்த்து வந்தார்கள்..

ஆயுள் இழந்த பேருந்து ..இவள் இருந்ததனால் என்னவோ ஆயுளை நீட்டிக்க வேகமாய் ஓடிக் கொண்டு இருந்தது.இவளைப் போல அழகிகள் இருப்பதனால்தான் இன்னும் பழைய பேருந்துகளை மாற்றாமல் லாபம் பார்க்கிறது போக்குவரத்துத் துறை.

வண்டி கண்கலங்கி நின்றது.ஆம் ! அவளிறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது போலும்.அவளும், அவளைச் சுற்றிய பார்வைகளும் படியில் இறங்கத் தொடங்கின.மெல்ல நடந்த அவள் பின் மெல்ல நடந்த இவன் மனது " உடலை மறந்து வைத்துவிட்டோமே என..மீள முடியாமல் மீண்டும் பேருந்தில் ஓடிவந்து ஏறி அதன் பொருளை பற்றிக் கொண்டது.

மீண்டும் மூளை திட்டியது."என்னமோ..இன்றுதான் புதிதாய் நடப்பதை போல் உருகுகிறாய்".அதனை சமாளித்து முடிப்பதற்க்குள், பாதம் "போதுமடா...என்னை மட்டும் வேலை வாங்குகிறாய்...சீக்கிரம் ஏதாவது செய் .." என்றது.அருகில் உள்ள இருக்கைக்கு அருகில் சென்றான்.அதில் அமர்ந்திருந்தவன் இவனை எதிர்க்கட்சிக்காரனை போல் ஏளனமாய் பார்த்தான்.பார்வையை மாற்றி
சன்னலின் வழியே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற பாவைகளின் தந்தைகளை, தேவையில்லாமல் பணம் செலவழித்துவிட்டதாக திட்டிக் கொண்டே வந்தான்.

கிண்டியில் நின்று மீண்டும் வண்டி வேகமாய் ஓடத் தொடங்கியது.படியினை பார்த்தான்..பதுமை ஒன்று பக்குவமாய் ஏறி வந்தது.சற்று நேரம் கழித்து அவளிடம் கேட்டான் " கிண்டி ஒரு ticket" என்று......

Wednesday, July 05, 2006

திருமண அழைப்பிதழ் !

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகிறது...
பத்திரிக்கைகள் வரதட்சணையில்
அச்சடிக்கப் படுகிறது...

Monday, July 03, 2006

கூண்டுக் கிளிகள் !!வீட்டின் சன்னலின் வழியே
வீதியை பார்த்து வடுந்தினான்...
கைரேகை தேடி அலைந்தவன்
கைரேகையில் ஒரு கூண்டுக்கிளி...

Saturday, July 01, 2006

ஈழத்தில் ஓர் ஓலம் !


அகம் மகிழும் ....
வீட்டில் அடுப்பெரிந்தால் !
வீட்டில் நெருப்பெரிந்தால் ?வீட்டை விட்டு
வெளியே செல்லவும்,
வீட்டை விட்டு விட்டு
வெளியே செல்லவும் முடியவில்லை !
நானும்,அதுவும் மீண்டும்
சந்திப்போமா என ??வெடிச்சத்தம் வெறுத்த எங்கள்
உள்ளம் தீபாவளியை
எப்படி தேடும் !!பாடமென்ன படித்து வந்தாய்
பிள்ளையிடம் வினவிக் கேட்டால்
மறைந்திருந்து சுடுவெதெப்படி,
மாட்டிவிட்டால் சாவதெப்படி ..


சொல்லி நடந்தான்
துப்பாக்கி மட்டையுடன் !!கடல் தாயே !
அகதியாய்,அனாதையாய் ஆகவிடாமற்
செய்யவா அன்றே அழைக்க வந்தாய் !
சிலரை அழைத்தும் சென்றாய் !!


நூறடி நிலம் வேண்டாம்
ஆறடி நிலம் போதும்
அதுவும் அவரவர் விரும்பும் போது
அடுத்தவன் விரும்பும் போதல்ல...போர்கள் நிற்காத பூமியிலே
பூக்களும்தான் பூப்பதில்லை !
பூ பூக்காத பூமியிலே
உயிர் வாழ்ந்தும் பயனுமில்லை !
பயினிலா செயலினை செய்வதற்கு
பாவியவர் தயங்கவில்லை !
தயங்கிவிடும் ஆறறிவே
தடுத்திடுவோம் போர்கள்தன்னை !!


கொள்ளியிடும் ஆசையெல்லாம்
மூட நம்பிக்கை ஆனதடா !
அள்ளியிடும் பிணங்களிலே
அன்னை பிணமும் போகுதுடா !!

மொழி பேசி,இனம் பேசி
அழிந்தவரை போதும்..
நிம்மதியாய் சாப்பிடுவோம்
ஒரு வேளை சாதம் !!

Saturday, June 17, 2006

மாமியாரின் வார்த்தைகள் மருமகளுக்கு...!!

சென்று வா மகளே ! சென்று வா !!

பிரம்மா ஆணல்ல , பெண்ணென பூமிக்கு
புரியவைக்க நீயும் போய் வா !!

உன் குழந்தைக்கு நீ தாயாக
மீண்டும் உன் தாய்க்கு நீ குழந்தையாக...


சென்று வா மகளே ! சென்று வா !!


கட்டி உடைந்தாலே தாங்காதவர் மத்தியில்
கருவன்முறை தாங்கி வருகிறாயே உன் மத்தியில் !!

புளிப்புண்ணும் உன் முகங்கண்ட உறவின்
முகங்களை பூரிப்புண்ண ஆரம்பித்து விட்டதே !!!


சென்று வா மகளே ! சென்று வா !!

கணவன் எவனென காத்திருந்த காலமெல்லாம்
கண்சிமிட்டல் நேரமடி ...உன் உயிர்க்காய் நீ காத்திருப்பது !!

நங்கையாய் ஆடித்திரிந்த நீ
நத்தையாய் நடந்து கொள் !!

உளிதனை தாங்கினால்தான் சிலை பிறக்கும்
வலிதனை தாங்கினால்தான் சிசு பிறக்கும்


சென்று வா மகளே ! சென்று வா !!

அம்மா ! அம்மா !! என நீ அலறப்
போவதெல்லாம்... உன் பிள்ளை
அம்மா ! அம்மா ! என அழைக்க

நீ மகிழ்வதற்கே !!

உன் வீட்டில் பிறந்து நீ இங்கு
மகளாய் வளர்வதை போல்
உன் பிள்ளையும் வளரட்டும்...

நெற்றி முத்தமிட்டு !
சந்தனம் பூசிவிட்டு ! பேச இயலா பெருகிய
கண்ணீரை ஆனந்தமாய் துடைத்துவிட்டு
அனுப்புகிறேன் உன்னை !!

" வாழ்க வளமுடன்
வருக நிலவுடன் "

சென்று வா மகளே ! சென்று வா !!

-என் அண்ணியின் வளைகாப்பிற்காய் என் தாய் நினைத்ததை நான் எழுதியது...

இதில் ஒரு முக்கியமான பொருள் சிதையாமல் எழுதியிருக்கிறேன்...
கண்டுபிடித்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

Saturday, June 03, 2006
கடலுக்கு சென்றால் இனியாவது
கால்களை நனையடி !!

கடலின் உவர்ப்பு கூடிக்கொண்டே
போகிறதாம் !!!!

வறண்டவை பார்த்து வற்றாத என் விழிகள் !!

"சோழ நாடு சோறுடைத்து" என்ற சொல்லுக்கும்
முப்போகம் விளைந்த நெல்லுக்கும்
சொந்தமான சோழப்பகுதிகளின் விகுதிகளே...
தஞ்சையாம் !

பச்சை வயலால் புகழுற்ற ஊரின்று
உச்சி வெயிலால் நிழலுற்று நிற்கிறதே !!

நீரில்லா ஆற்று மண்ணில்
நீந்தியவை தேடி அலையும்...
கொக்குகள் ஆயினவே ! மக்குகள் !!

புலி பசித்தாலும் புல்லுன்னா
காலம் போய்...
புல்லில்லா பசித்த ஆடுகள்
பூச்சிகள் உண்றனவே !!

ஆங்காங்கே கண்டழுதேன்
ஆண்மையில்லா பம்புசெட்டுகளை !!

தனக்காய் சண்டையிடும் அண்டையர்களை
கண்டகம் மகிழ்ந்த வரப்பின்று
வயலவாய் மாறியும் வருவோர்
யாருமில்லையே !!

நன்செய் உழுது வாழ்ந்தவெரெல்லம்
நஞ்சை உண்டு மாண்டனரே !!

வளங்கள் எல்லாம் வரலாறாய் ஆனதடி !
எதிர்காலம் என்ன பதில்கூறுமடி !!

விரைவில் விழிப்போமென உறங்குகின்றன !
விதைகளும்.....
உழைத்த சதைகளும் !!

Friday, June 02, 2006

நாருக்கும் உண்டிங்கே தனித்தன்மை !!

பூவோடு சேர்ந்து நாரும் மணக்கலாம் ! ஆனால்
பூவோடு சேர்ந்தாலும் நார் வாடுவதில்லை !!

Thursday, May 25, 2006

செல்லப் பெயர் !!

மல்லிகையை முல்லை என்றழைத்தேன் !!
சிரித்தார்கள் சிலபேர் !!

நான் என்ன உனை நிஜப்பெயர்
சொல்லியா அழைக்கிறேன் !!!

Thursday, May 18, 2006

நான், நிலவு , தனிமைநினைவுகள் எனை வருடி உறங்காமற் செய்ய
மேகங்கள் நிலவை வருடி உறங்கச் சொல்ல !!


நம்மிடையே உறக்கம் தான் இல்லை
உரையாடல் இருக்கலாமே - நான் !

"கேள்விதனை மேலெறிந்து
பதில்தனை பிடித்துக் கொள்" - நிலா !!


நானும், நிலவும் ஆனோம்
தருமியும் ,சிவனுமாய்...

ஆண் வாழ்வு ஒள்வீச ஆதாரம் பெண்தானோ ?

என் வாழ்வு ஒளிவீச காரணமவன் ! கதிரவனவன் !!


வெண்ணிலவை ! பெண்ணிலவாய் ஒப்பிடுவதேன் ?

...
.....

பதிலளிக்க மறுத்துவிட்டு
மறைந்ததுவேன் முகிலுனுள்ளே !!

காரணம்தான் நானறிந்தேன் ! அதன்
காரணம்தான் நாணமென நானறிந்தேன் !!!


உடலிலா உரு கொண்டாய் ! கரு எதுவோ ?

முன்னதொரு பிறவியிலே
உன்னவளிடம் தோல்வியுற்று
உடலினை சுருட்டி உருண்டையானேன் !!


காதலியை பிரிந்து நானிருக்க
கதிரவனை பிரிந்து நீயிருக்க
காரணமாய்த்தான் தேய்கிறாயோ தினந்தோறும் ?

அடேய் ! மானிடா !!
உன் ஊடல் காமத்திற்கின்பமடா
என் தேய்தல் கிரகணத்திற்கின்பமடா !!


பால் நிலவே ? கடுகளவும் களங்கம் உனக்கேன் ?

பாதகா ! பருவென்றும் பாராமல்
"சிப்பிக்குள்ளேதானே முத்துக்கள்..
சிலையின் முகத்தில் எப்படி என்பாய் ??...உன்னவளிடம்

என்னவனிடம் எடுத்துரைத்து
உன்னுருவை கருவுருவாய் ஆக்கிடுவேன் !!

கோபம் வேண்டாம் வான்மகளே
உனை கான நாங்கள் வந்தோம்
நின் பாதம் பூவுலகில் படுவதெப்போ ?

காதலெனும் சொல் கவியிலும்,புவியிலும் இல்லாத பொது ....


தினம் இரவும் உறங்கமாட்டாயா ??

தினம் !
காதலியை காண்பதால் உறக்கமில்லை உனக்கு
காதலனை காணாததால் உறக்கமில்லை எனக்கு !!


போதுமடா ! பதில்கள்தான் தீர்ந்திடினும்
கேள்விகள்தான் தீராதோ ?

உன்னவளும்,என்னவனும்
நமை காதலர்களாய் காணுமுன்னே
கண்ணுறங்கு நன்மகனே !!


வெண்ணிலவை இமை மூடி மறைத்து
பெண்ணிலவை இதயத்தில் மூடி மறைத்து

இமைக்காமல் உறங்கினேன்
ஓர் இனிமை இரவில் ...

-- செல்வேந்திரன்.

Tuesday, May 16, 2006

ஆறு நோக்கி செல்லாதே ! தலைவா !!
ஆட்சிபீடம் நோக்கி செல் !!

உன்மேல் விழுந்த சேறுதனை
கழுவுவதல்ல உன் வேலை !!

உன் பணிக்காய் காத்திருக்கும்
மக்களின் கவலைதனை துடை !
அவர்தம் ஆனந்தக்கண்ணீர் செய்யும் அப்பணியை !!

உடல் தழும்பு ! உண்மை வீரனுக்கு
உன் உள்ளத்தழும்பு தமிழுலகின் விடியலுக்கு !!

களிம்பு மருந்து தேட வேண்டாம் ! உன்
காயம்தனை மக்கள்தம் களிப்பு
மருந்து ஆற்றட்டும் !!

பெருமூச்சு எதற்கு ??
உன் மூச்சே போதும் !! அவர்கள் மூர்ச்சையாவதர்க்கு !!

கால்கள் குத்திய கற்களெல்லாம் இனி
உன் கால்தூசிதனை கூட குத்தாது !!

சொன்னதை செய்வான் வாரிசென
அய்யாவின்,அண்ணாவின் ஆத்மாக்கள்
உளம் மகிழட்டும் ! அதைப்போல்
இவ்வூர் மகிழட்டும் !!

கதிரவனின் உதயத்துடிப்பும் !
கலைஞரின் இதயத்துடிப்பும் !!
நீடிக்கும் இவ்வுலகில் !!

-- செல்வேந்திரன்


கலைஞரின் வெற்றி கவிதை:

ஆறு நோக்கிச் செல்கின்றேன்
அவர்கள் வாரி இறைத்த
சேறு கழுவிக் கொள்வதற்காக!

களிம்பு மருந்து தேடுகின்றேன்
தழும்பு தோன்றிடும் நெஞ்சக்
காயத்தில் தடவுதற்காக!

மூச்சை இழுத்துப் பெருமூச்சாக
விடுகின்றேன்; அவர்தம் ஆபாசப்
பேச்சை என் சுவாசம்,
அடித்துப் போவதற்காக!

வெற்றி என்பதைத் தேடிக் கொடுத்து
துரோகத்தின்
நெற்றிப் பொட்டில் அறைந்திட்ட
உடன்பிறப்பு நீ இருக்கும்போது;

உடல் பொருள் ஆவி அனைத்தையும்
உலகில் ஓர் துரும்பென மதித்து

கடல் போல் நம் அணியைப் பெருக்கிட
கழகம் வளர்த்திட

கண்ணியர் அண்ணாவின் வழி நடத்திட
கட்டுப்பாடெனும் அய்யாவின் மொழி போற்றிட-
காத்திருப்போம்; தமிழகத்தைப்
பூத்திருக்கும் மலர்ச் சோலையாக்குதற்கே!

-மு.க.

Thursday, May 04, 2006

" இன்றைய மழை நீர்
நாளைய உயிர் நீர்"

வாசகத்தை வாசித்தேன் !
தார்ச்சாலையை நனைத்த
தண்ணீர் லாரியில் ....

Thursday, April 06, 2006

கருவின் குரல்

பிறந்த பிறகு ஆசையை
துறந்தான் புத்தன்...
பிறக்கும் ஆசையையே துறந்தேனே
புத்தனின் குருவோ ??

நான் உன்னை அம்மா என்றழைக்கத்தான்
உனக்கு விருப்பமில்லை...
உலகம் என்னை அனாதை என்றழைக்கவாவது
விட்டிருக்கலாமே ???

புற உதை புருசனிடம் !
அக உதையாவது மிஞ்சட்டும் என்றா
அழித்துவிட்டாய் ???

பிறவாமலேயே நீச்சலடித்தேன்
உன் நீர்க்குடத்தில் !!
என் பிறப்புக்காக ஏன் எதிர் நீச்சல்
அடிக்கவில்லை ???

நீங்கள் மட்டும் கட்டிலில் ஆடிவிட்டு
என்னை தொட்டிலில் ஆடவிடாமற் செய்ததேன் ???

நீஙகள் செய்த பாவத்தின் சம்பளம்
என் மரணமா ??

பெற்றவர்களின் பாவம் பிள்ளையை போய் சேருமாம்..
அப்படி என்ன பாவம் செய்தீர்கள் ???
பிள்ளையே போய் சேர்ந்துவிட்டதே !!

இறந்தவர்கள் கூட வாழுகிறார்கள் புகைப்படமாய் !!
எனக்கு மட்டும் ஏன் இப்படி ??

தாய்ப்பால் தரத்தான் விருப்பமில்லை உனக்கு...
உன் கையால் கள்ளிப்பால் கொடுக்கும் வரையாவது
உயிர்வாழ விட்டிருக்கலாமே ??

இனியாவது கருக்கலைப்பை தடை செய்யுங்கள் !
கருத்தடையால் தடை செய்யுஙகள் !!

- கலைந்த ஒரு கருவின் கதறல்..

தாய் மொழி இல்லா குழந்தைக்காக
என் தாய்மொழியில் மொழி பெயர்ப்பு - செல்வேந்திரன்

Wednesday, April 05, 2006

சாப விமோசனம் !!

வீணாய் வளரும் நகங்களுக்கு
சாயம் பூசி சாபம் போக்குகிறாயே !!

உறைந்து கிடக்கும் என் உதடுகளுக்கு
உன் உதடுகளினால் சாயம் பூசி...

சாபம் போக்குவாயா ???

Wednesday, March 29, 2006
பிறந்த நாளெனினும்
இன்பமில்லை எனக்கு !

காரணம் கேட்டால்
கண்ணீர்தான் வருகிறது !

ஆண்டொன்றும் ஆகிட்டதே
அக்கொடுமை நிகழ்ந்து !!

அன்றுதான் எனை பாதித்த !
என்னால் பாதித்த ஒரு மரணம்

"புத்தாடை உடுத்தியவனை புதிதாய்
கோயிலுக்கு செல் " என்றதாலென தாயும்..


"சாவியை கொடுத்துவிட்டு
சாவகாசமாய் வா" என்றதாலென தந்தையும்..

"விரைவாய் வீடு திரும்பு" என
வீதியிலே உரைத்ததாலென அக்காவும்..

அலறிய பொழுது ! பேசமுடியா
பெருங்குற்றவாளி நானல்லவோ !!

உறக்கமில்லை இன்று வரை
உடலாய் இருந்தவன் இறந்ததிலிருந்து...

பெற்ற கடனை பற்றி புலம்பியவர்களிடம்
விற்ற கடனை பற்றி பேச வந்தார்கள் !!

"அவந்தானே எங்கள் கடைக்குட்டி
அடைத்திருப்பானே உங்கள் வட்டி ""கௌரவத்தை விற்று கடனை வாங்கினோம்
விலைக்கெங்களை விற்று வேலைதனை வாங்கினோம்"

வேலையில் சேரும் முன்னே ! அவன் சேரும்
வேளை வந்ததே !!

வருடம் ஒன்றிற்கே வலிக்கிறதே
வாழ்க்கை முழுதும் எப்படி !!

உயரமாய் புகைபடம் மாட்டத் தெரியாதவனை
உயரத்தில் புகைபடமாய் மாட்டியவன் நானே !!!

இறந்தவன் யார் தெரியுமா ??
என்னுடன் பிறந்தவன் ! என்னுடம்பாய் பிறந்தவன் !!

ஒரு நொடியில் வேகத்தை முறுக்கி வைத்து
மறு நொடியில் ஆயுளை முடித்து வைத்தேன் !!

எவனையோ முந்த நினைத்து
எமனையே முந்த விட்டேனே !!

மூடினால் முடிக்குள் காற்று புகாதாம்
மூச்சே புகாமல் போயிற்றே !!!

அரைமணி சுமையை தவிர்க்க நினைத்து
ஆயுள்வரை சுமையாய் ஆனேனே !!

தலைகவசம் அணியாததலேதான்
எனக்கின்று தவசம் !!

சோம்பலாய் அணிய மறுத்தவன்
சாம்பலாய் ஆனேனே !!வேண்டாம் ! வேண்டாம் !
வேண்டாதார்க்கும் வேண்டாம் இந்நிலைமை !!

அற்பமாய் ஆயுளை முடித்துவிட்டு
ஆவியாய் திரியாதே !
உன்னால் வாழ்பவர்களை
உயிர்ப்பிணமாய் ஆக்காதே !!

- அழுகையுடன் ஒரு ஆவி

[Please wear helmet ]

Wednesday, March 01, 2006

இயற்கை கூந்தல் மணக்குமா ?
இறைவனுக்கும், இன்னொருவனுக்கும் விவாதமாம்...

காம்பில் வாடா பூக்கள்
கருங்கூந்தலில் வாடிய காரணம் ...

இன்னுமா புரியவில்லை
கூந்தல்மணம் இயற்கையென்பது !!!
பழக்கடை !!

வாடிய மரத்தில் பூக்கள் இல்லை !
ஏன் ! இலைகள் கூட இல்லை...

ஆனால் பழங்கள் மட்டும் மரத்தடியில்...
சாலையோர நிழலில் பழக்கடை !!!

Sunday, February 19, 2006

தேய்பிறை !

அம்மா ! தினமும் நிலாச்சோறு
எனக்கு ஊட்டுகிறாயே

அதற்கும் சிறிது ஊட்டேன் !
பாவம் ! பசியால் தினமும் மெலிந்து வருகிறதே ...
போண்டா

மனிதர் சிலர் இறந்த பின் தான் எண்ணைச்சட்டி !
மனிதர் உண்ணும் உன் பிறப்பிடமே எண்ணைச்சட்டி !!

கொதித்த நல்லெண்ணையால் உன்னுடலில் பெருங்காயம் !
சகித்த உன் நல்லெண்ணத்தால் உயிர் பிழைத்தது வெங்காயம் !!

பாட்டியால் புகழுற்று புத்தகத்தில் இடம்பிடித்தது வடை !
போட்டியாய் உனை போற்றி அதற்கு தருகிறேன் விடை !!

தனியாய் என்றும் வாணலியில் பிறந்ததில்லை !
ஒன்றாய் என்றும் மனிதவாயில் இறந்ததில்லை !!

ஒட்டிய தண்ணீரை ஒதுக்கிவிட்டு எண்ணையை சுமந்தீர்கள் !
பின் எண்ணையை ஒழுகவிட்டு ஆசையை துறந்தீர்கள் !!

சிலருக்கு ! மாலையில் நீதான் சிற்றுண்டி !
அரிதாய் காசு கிடைத்த சிறுவனுக்கு நீயே பேருண்டி !!

இன்று !
உருண்டையாய் உள்ள உன்னை நான் உண்கிறேன் ...

நாளை !
உருண்டையாய் உள்ள உலகம் எனை உண்ணும்......
என்னவளே ! அடி என்னவளே !!

பூவிற்க்கு பின்னால் காய் என்கிறார்கள்..
பூவிற்க்கு பின்னால் பூதான் என்கிறேன் நான் !

என்னவள் தலையில் பூ !!!
பிறந்த நாள்

பிறந்த நாளை கொண்டாட
இயழவில்லை என்னால் !
ஏனெனில் ஒருவகையில்
இறந்த நாள் ! அந் நாள் !!

ஆம் ! என் கருவறைவுலக மரணம்
அன்றுதான் நிகழ்ந்தது...

Thursday, February 16, 2006

அம்மா

காலத்தை வெறுக்கிறேன் !
நான் பிறந்தவுடன் நில்லாமல் போனதற்காக...ஏனெனில்
உன் மடியில் மழலையாகவே வாழ்ந்திருப்பேன்...

கண்ணாடியை வெறுக்கிறேன் !
உன்னால் கிடைத்த சிகையலங்காரம் சிதைந்ததற்காக...

நட்பினை வெறுக்கிறேன் !
உன்னுடன் பழகும் காலம் குறைந்தமைக்காக...

காதலியை வெறுக்கிறேன் !
கனவில் கூட உனை நினைக்க விடாமற் செய்தமைக்காக...

கடைசியில் அம்மா ! உன்னையே வெறுக்கிறேன் !!
என்னை அம்மா ஆகவிடாமல் ஆணாக படைத்ததற்காக...

Saturday, January 21, 2006

நம் வாழ்க்கை

அலுவலகத்திலிருந்து ஆரறை மணிக்கே கிளம்பினேன்
இருந்தும் ஆச்சர்யமில்லை ..ஆம் அது அதிகாலை ஆரறை..

Bus stand வந்தவுடனே Bus வந்தது
எனக்கல்ல எதிர்சாலையில்...
இக்கரைக்கு அக்கரை பச்சை மட்டுமல்ல..Bus ம்தான்

காலைக்கடன் நல்லது என்பதை தவறாய்
புரிந்த ஒருவன் கையை நீட்டினான்...

"சில்லரை இல்லை சென்றுவிடு" என்றேன்
"conductor இடம் இதையே சொல்லு கலாய்ப்பான்" கூறிவிட்டு சென்றான்
மனதுக்குள் சிரித்தும்,சிந்தித்தும் நின்றேன்..

கைகளை நீட்டினேன் பேருந்தை நிறுத்த
Traffic Police ஐ கண்ட Two-wheeler போல் நிற்காமல் சென்றது
கல்லூரி வரை கற்றதாயிற்றே...எப்படியோ ஏறிவிட்டேன்..

பூசாரிக்கும், நடத்துனர்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு
பூசாரி நமக்காக அர்ச்சனை செய்வார் !
நடத்துனர் நம்மை அர்ச்சனை செய்வார் !!
அர்ச்சனை முடித்ததால் அவருக்கு காசை கொடுத்துவிட்டு
தட்சனையாய் பயணசீட்டை பெற்றேன்..

உள்ளிருந்த எனக்கு "புகை பிடித்தல்" கெட்டது என்றும்
பின்னால் வந்தவனுக்கு "புகை குளியல்" நல்லது என்றும்
புகை விட்டபடியே சென்றது பேருந்து...

இரவு உறக்கம் இல்லாததால் இருக்கையிலேயே
உறங்க ஆரம்பித்தேன்...

"தம்பி எழுந்திரிப்பா" ...

"இன்னும் கொஞ்ச நேரம் Mummy"..... Please.

"தம்பி எழுந்திரிப்பா ...இது Ladies seat" ..

கண் விழித்து பார்த்தேன் நின்றது
கருணை அதிகமாயும்,உருவம் சின்னதாயும் உள்ள ஒரு பெண்...

எழுந்து நின்று அரைமணி தான் இருக்கும்
அதற்க்குள் இறங்கும் இடம் வந்து விட்டது ;-)

எதிரே வந்த பெண் என்னையே பார்த்து சென்றாள்..
சின்னதாய் வந்த சந்தோசம் சில நொடிதான் நீடித்தது..
அவள் பார்த்தது என்னையல்ல ..என் ID-Card ஐ...

வீதியில் நடந்து வந்தேன்...

School van க்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கும்,
Office Bus க்காக காத்திருக்கும் என்னை போன்ற நண்பர்களுக்கும்
அவர்கள் செல்ல போகும் இடம் சந்தோசமாய் இருப்பதில்லை..

கடல் நீரை குடி நீராய் மாற்ற முடியுமா ?
என ஆலோசிக்கும் அறிஞர்கள் மத்தியில்..
அன்றைய உணவை குப்பை தொட்டியிலிருந்து
எடுத்துசென்றான் ஒரு தூய்மையில்லா தூய்மை விரும்பி !!!

சோர்வாய் வீட்டை அடைந்தேன்.
நண்பர்கள் வீட்டில் Night Shift முடித்துவிட்டு
அவரவர் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொன்டிருந்தார்கள்..

என்ன சாப்பாடு என்றேன் ?
சப்பாத்தி என்றான் என் நண்பன்..
"அது நேத்து Night குதானடா.."
"Night வரமாட்டேன் சொன்னியா ? காலைலயும் உனக்கு அதான்டா"...என்றான்.

முழுதாய் மூன்று மணி நேரம் கூட இருக்காது என்னுறக்கம்
Complete ஆகாத code என்னை அதற்குள் எழுப்பிவிட்டது

எழுந்து கிளம்பினேன்...
"இன்றாவது சீக்கிரம் வரணும்"....என்றபடியே !!!!