Friday, January 22, 2010

தவற விட்ட பயணச்சீட்டு



பேருந்து பயணத்தில்
வேண்டுமென்றே உரசியவனை
வேகத்தில் முறைத்தும் வைத்தாள்
வேதனையை மறைத்தும் வைத்தாள்

மடித்த புடவை மடிப்பினை
மறைக்குமிடம் அனுப்புமுன்
முதுகினில் முத்தமிட்டே முன்புறம்
உதவும் கையினை நினைத்துவிட்டாள்

தனை அணைக்க தானில்லை
பொங்கியது போதுமென
அடுப்பினில் வெந்த பாலை
அமைதியாய் அனைத்து வைத்தாள்

பெற்றவரின் பெருமையை நினைவிலேற்றி
ஒற்றை கடிதமதை நிராகரித்து
உரிய வரனின்று அமையாமல்
ஊமையாய் அழுது வைத்தாள்

வெயில் பிரதேசமும், குளிர் பிரயாணமும் :



நம்மூர் மழையினை நியாபகங் கொண்டு
வானத்தின்கீழ் வலக்கை நீட்டியவன்
கடனாளிக் குளிரின் பனிதூவலை
உள்ளங்கை வாங்கியுயரே எறிகிறேன்

வாரத்தில் சிலநாள் வானமே பார்த்திராதவன்
தினமுறங்கு முன்னும் விழித்த பின்னும்
weather.com விசாரித்தே
வேலைக்கு விரைகிறேன்

வெள்ளத்தில் வீடே மிதந்த போதும்
வேடிக்கையாய் பாம்படித்தவன் வெள்ளை
பனியில் மூழ்கிய காரினை
விரைக்க விரைக்க புதையலெடுக்கிறேன்

மெலிதான மழையில் கண்மூடி
உடல்நனைந்து அமுதம் குடித்தவன்
மிதமான பனித்தூறலில் உடல்மூடி
கண்திறந்து குளிர் உண்கிறேன்

அதிகமாய் பெய்து பலிகள்சில
ஆனபோதும் எம்மழையை கடுஞ்சொல்
கூறிய தில்லை
மழைக்கு அடுத்ததாய் ஆகிவிட்ட
மமதையில் நிற்காமல் நீடிக்கிறது
இரண்டாம் பிள்ளை....