Monday, June 18, 2012


நனைந்த மரமும் நனையாத நானும் !

உரையாட உறவிருந்தும்
தோணாத தனிமையில் தானாக
உலவ வந்தேன்
உயிரோடு தானிருந்தும்
உறவில்லா மரமொன்று
மழையீரம் உலர்த்தி நின்றது

மழையில் நனைந்த மங்கையிடம்தான்
பேச இயலாது ! மரத்திற்கென்ன
பேச ஆரம்பித்தேன்

ரசிப்பது பகல் மழையா ? இரவு மழையா ?
பகல் மழையில் பரவசமாய்
நனையும் மழலைகளையும்
இரவுமழை குளிரில் நடுங்கும்
கூடில்லா காகங்களையும்

மழை நின்றும் தூறலை நீட்டிப்பதேன்?
கலவி முடிந்தும்  நீங்கள் கட்டியணைத்து உறங்குவதேன்?

பூவேன் மேல்நோக்கி ? பழமேன் கீழ்நோக்கி ?
அதுவா ! ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசை
கண்டறிய வினையூக்கி

மலர்களேன் மங்கைக்கு மட்டும்?
மடையா ! பூவை பாவைக்களித்தால்
மணக்கும் மலரும் ! மணக்க மங்கையும்
உனக்கு மட்டும்

புகையொன்று பிடித்திடவா?
வேண்டாம் ! உன்னுடன் உடன்கட்டை...விருப்பமில்லை

கயிறு கட்டி தொங்கினால் வலித்திடுமோ ?
இரு கயிறு - மழலை ஊஞ்சலாட்டம் - சுகம்
ஒரு கயிறு - உயிர் ஊசலாட்டம் -வலி

நீண்ட நீரம் கேட்டுவிட்டேன்..நீ போய் தூங்கென்றேன்
ஏன் ?
உறங்காமல் வாடிய பூக்களின் முகங்கண்டு
முத்தமிட வாராது காலையில் கருவண்டு

இதமான தென்றல்
சிறுதளித்து விட்டு
இரு நொடியிலேயே
உறங்கிப் போனது

அடுத்ததாரென சுற்றிப் பார்க்கையில்
மேகத்தினூடே ஓடி ஒளிந்தது
மின்னலொன்று.......


அன்புடன்,
ந வ செல்வேந்திரன்Tuesday, April 19, 2011

பூ - மனிதத்தின் அடையாளம்ஐந்து இறந்து பிறந்தாலும்
ஆறாவதை அயராமல் சுமக்கும்
தாய்போல 
அடிக்கடி நிலம் பிளந்தும்
அவர்கள் சாடி ஓடவில்லை
வேறு நிலம் தேடி வாழவில்லை

காலிழந்தும் கையிழந்தும்
வலியிழந்தும் வாளிழந்தும் 
எதிரியை மீண்டும் போரிட
அழைக்கும் போராளியாய் 
நிலம் விரித்தும்
கடல் புகுந்தும்
வரிசையில் உணவிற்காய் வரம்பு மீறியதில்லை
வீடிழந்தவரை வீதியில் உறங்க விட்டதில்லை.

அணுகுண்டுகளால் அழித்த அமெரிக்காவிற்கு
பூமரங்களை பரிசாய் அளித்தார்கள்
தடமில்லாமல் அழிந்த இடத்தை
அமைதியின் நகரமாய் ஆக்கினார்கள்

கடும்பனியால் இலைகள் இழந்தாலும்
கிளைமுழுதும் பூக்களை முதலில்
பூக்கும் இம்மரங்கள் அப்பூமியில் 
தோன்றியதில் ஆச்சர்யமில்லை...

Friday, April 08, 2011

என்று அழியும் இந்த ஊழலின் மோகம் !!

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடு என்றான்
பாட்டன் எங்கள் பாரதி

தனியொரு மனிதனாய் உண்ணாமல்
ஊழலை அழிக்க இதோ !
தாத்தா நீ ஹசாரே 

எதிரியிடமிருந்து நாட்டை காக்க
அன்றணிந்தாய் இராணுவ உடை
ஊழலிலிருந்து நாட்டை மீட்க
இன்றணிகிறாய் வெள்ளை ஆடை
நல்ல வேளை ! ஆம் ராணுவ உடைகளை
குண்டுகள் எளிதில் துளைக்கின்றனவாம்

ஒரு வங்கியில் கூட உனக்கு கணக்கிலை
ஊழலுக்கு சுவிஸ் வங்கிகளில் இடம் போதவில்லை

விவேகானந்தரால் விழித்தவன் நீ !
உன்னால் உணர்ந்தோம் நாங்கள் !!

உன் பசித்த உடலுக்கு
சட்டத்தால் சாதம் ஊட்டும் வரை
எட்டு திக்கும் குரல் கொடுப்போம்
ஏறுகொண்டு ஊழலை ஒழிப்போம்

Monday, March 07, 2011

இமையோடு உதிர்ந்த கண் !!!


மேற்கே - I :
அவள் தனியாக இருந்தாள்.மணி இரவு ஒன்பது பதினொன்று.வீட்டில் அனைத்து விளக்குகளும்
அணைக்கப்பட்டு இருந்தன.விளக்குகள் கூட்டத்திற்கு உகந்தது.இருட்டு மட்டுமே தனிமைக்கு
உகந்தது.செல்போன் கையிலே இருந்தது.அவனுடைய அழைப்பிற்காகத்தான் காத்திருக்கிறாள்.
நாளை காலை பதினோரு மணிக்கு எல்லாம் சந்திக்கலாம் என்றிருந்தான்.
இப்பொழுதான் பேசி முடித்திருந்தான்.அவள் அசை போட்டுக் கொண்டிருக்கிறாள்...
"என்ன மன்னிச்சிடு?"
"ம்"....
"இன்னைக்கு தான் நம்ம போறதா பிளான் பண்ணிருந்தேன்.கடைசில இங்க கொஞ்சம்
பிரச்சனை.ஆனா ..நாளைக்கு கண்டிப்பா நான் வருவேன்.நீ கிளம்பியிரு.நேரில் பேசிக் கொள்ளலாம்.
நீ எதுக்கும் கவலைபடாத...சாரி மா..."
"சரி ..சரி ..எனக்கு புரியுது..ஆனா முக்கியமா ஒரு விஷயம்..."
"என்ன...அடுத்து போன் பேசுனா ஹலோ சொல்லி பைல முடிங்க..மன்னிச்சிடுனு ஆரம்பிச்சி
சாரி ல முடிக்காதீங்க.."
"மன்னிச்சிடு சாரி "...
"மீண்டுமா?"..புன்னகையுடன் இருவருடைய தொடர்பும் துண்டிக்கபட்டது.
ஆனாலும் அவள் மனது ஏனோ பதை பதைத்தது. போன் பண்ணினால், சூழ்நிலை சரியாக இருக்கும்பொழுது தானே அழைப்பதாக மட்டும் சொல்லிவிட்டான்.எப்பொழுதும் கலகலப்பாக இருப்பான்.இரண்டு வாரமாக சரியாக பேசவில்லை.கண்டிப்பா வருவான என.குழப்பத்துடனே அவள் உறங்கி போனாள்.

கிழக்கே - I :

"குட் மோர்னிங் மேடம்..வி ஆர் காலின் பிரம் கிரெடிட் கார்டு கம்பெனி.."
"யா டெல் மீ"
"டூ யு ஹவ் சம் டைம் டு டிஸ்கஸ் ?"
"மே இ நோ ஹொவ் டிட் யு கெட் மை நம்பர்"
"வி ஹவ் வெரி குட் ஆபேர் பார் யு.ப்ரீ ஹஸ்பன்ட் வித் ப்ரீ கிரெடிட் கார்டு"
"ஐ அல்ரெடி டிசைடு டு டைவர்ஸ் மை ஹஸ்பன்ட்...சோ திஸ் இஸ் வெரி குட் ஆபேர்"
"அடிப்பாவி..."
"பின்னே.." ஆபீஸ் ல இருந்து பண்ணா எனக்கு தெரியாதா...என்னமோ பிஸி ஆ இருப்பேன்
போன் லாம் சான்ஸ் எ இல்லனீங்க.."
"இன்னும் என் மேனேஜர் வரல.மீட்டிங் ல வேற இரண்டு மணி நேரம் பேசணும்...
உதடெல்லாம் உலர்ந்திடும்..அதான் கொஞ்சம் ஈரம் உன்ட வாங்கிக்கலாம் னுதான்
ஆபீஸ் ல செல்போன் ல பேசுனாதான் எல்லாம் ஒரு மாதிரி பார்ப்பாங்க...இப்ப ஓகே..."
"ஒரு நிமிஷம் இருங்க..
ஐஸ்கிரீம் சாப்பிட்டுகிறேன்..
அப்பதான் ஈரம் இனிப்பா இருக்கும்.."
"சரி சரி...ஈரம், இனிப்பு, சூடு மூனும் இருக்கணும். 3 ரோசெஸ் மாதிரி..."
"ஆபீஸ் ல இருக்கப்ப பேசுற மாதிரியா பேசுறீங்க..."
"சரி சரி..மேனேஜர் வரார்..நான் ப்ரீ ஆ இருக்கப்ப கூப்பிடுறேன்.
சிரித்த படியே வைத்தான்..மேனேஜர் கு ஹலோ சொல்லிவிட்டு எழுந்து நடந்தான்...

மேற்கே - II :
காலை எழுந்தவுடன் செல்போன் எடுத்து பார்த்தாள்.வாய்ஸ் மெசேஜ் இருந்தது.அவன்
வந்து கொண்டே இருப்பதாகவும், வந்து இறங்கியவுடன் அழைப்பதாகவும் சொல்லிருந்தான்.
உடனே அழைத்தாள்.சுவிச் ஆப் செய்யபட்டிருந்தது.தெரிந்தும் பலமுறை மீண்டும் அழைத்து பார்த்தாள்….பதில் இல்லை.

சில நிமிடங்கள் கழித்து செல்போன் அலறியது.ஆர்வமாய் எடுத்தாள் அவன் எண்ணை எதிர்பார்த்தபடியே அது அவனிடமிருந்து இல்லை.வேறு யாரோ இருந்தார்கள்.மனதை திடப்படுத்திக் கொள்ள சொன்னார்கள்.எதிர்பாராத ஒரு விபத்தில் அவன் இறந்து விட்டதாகவும்.பயணப்பதிவில் அவன்தான் என உறுதி செய்ததாகவும்
கூறினார்கள்.செல்போன் கீழே விழுந்து நொறுங்கியது.அவளும் தான்.பதினைந்து நிமிடங்களுக்கு மேல் மயக்கத்தில் இருந்தாள். எழுந்தவுடனே அவன் புகைப்படம் முன்னே வந்து அழுதாள்.அதில் அவன் சிரித்துக் கொண்டு இருந்தான்.

வந்தவர்களெல்லாம் ஆறுதல் கூறினார்கள்.எல்லாத்தையும் மறந்து விட சொன்னார்கள்.
சிலர் விதி என்றார்கள்.சிலர் சதி என்றார்கள்.சிலர் அமைதியாக அழுதார்கள்.சிலர் அழுது அழுது அமைதியானார்கள்.வற்றிய குளம் வானம் பார்ப்பதை போல் அவள் கண்கள் எங்கேயோ வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.

நாட்கள் நகர ஆரம்பித்தது.


கிழக்கு - || :

"என்ன பண்ற ? "
"சும்மாதான் இருக்கேன்..ஒரு தொல்லை பேசி அழைப்புக்காக காத்திட்டு இருக்கேன்..."..."நீங்க என்ன பண்றீங்க"

"அப்படியா...அவசரமா ஒரு விஷயம் கேக்கணும் அதான் கூப்பிடறேன்.கேட்டுட்டு வைச்சிடுறேன். இங்க ஆபீஸ்ல ஒருத்தி அழகா இருந்தா.அரைமணி நேரம் பேசுனோம்.காபி எல்லாம் சேர்ந்து குடிச்சோம்.அவளுக்கு என்னை ரொம்ப புடிசிடிச்சி போல.டின்னெர் போலாம்னு கேட்டாள்.அதான் எந்த ஹோட்டல் போலாம்னு என் தோழிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன்..எந்த ஹோட்டல் போக.."
"கோர்ட்-யார்ட்-டிவோர்சே-யார்ட்"
"கோர்ட்-யார்ட்-மாரி-யார்ட் தான் கேள்விபட்டிருக்கேன்...இது புதுசா இருக்கும் போல இருக்கே...
"போங்க ...நான் போன் ஐ வைக்கிறேன்"
"ஏய் ..வைக்காத..நேத்து ப்ரீ ஆ இருந்த மாதிரியே ..இன்னைக்கு கொஞ்சம் ப்ரீ ஆ இருக்கேன்..
ஆனா அடுத்த வாரம்லாம் ..ஓவர் பிஸி ஆகிடுவேன் போல இருக்கு...அதான் நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பேசிட்டு இருக்கேன்...அப்புறம் லேடி பத்தி சொன்னது உண்மை...ஆனா அந்த லேடிக்கு உன்னைவிட மூணு
மடங்கு வயசதிகம்..டீம் டின்னெர் போறோம்னுதான் நான் காலைல சொன்னேன்ல அதான்.."


மேற்கே - III

அவனை பற்றிய பேச்சுகள் குறைந்து...அவளை பற்றி பேச்சுகள் அதிகமாக இருந்தது "இந்த சின்ன வயதில் அவளுக்கு இப்படி நேர்ந்ததென்று".உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவோ அழைத்தும் அந்த வீட்டைவிட்டு வர மறுத்துவிட்டாள்.

திருமணம் முன் தனியாக இருந்து அதிகமாய் பழக்கப் படாதவள், பின்பு அவனுடன் அல்லது அவனுடனான நினைவுகளுடன் மட்டும் நேரம் கடத்தப் பழகியிருந்தாள்.கடினம் தான் , ஆனால் மீண்டுவிடுவேன் என்று கூறியிருந்தாள்.

கடந்த கால சோகங்களில் நீடித்து நிலைப்பது மரண இழப்பு மட்டுமே.கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாள்.ஆனாலும் வீட்டில் இரண்டு, மூன்று பொருட்களை தவிர மற்ற எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் அவனை நியாபக படுத்திக் கொண்டே இருந்தது.திடீரென அந்த எண்ணம் தோன்றியது.அவன் சம்பத்தப்பட்ட அனைத்து பொருள்களையும் படுக்கையறையில் சேர்த்தாள்.”திருமண புகைப்படம் முதல் திங்ககிழமை கடைசியாய் வாங்கின பூங்கொத்து வரை, அவன் உபயோகபடுத்திய கணிப்பொறி முதல் காலுறை வரை, அவனுடம் முகம் பார்த்த கண்ணாடி முதல் , அவனுடம் அகம் சேர்த்த கட்டில் வரை, கடைசியாய் கையசைத்த காட்சி முதல் இடியாய் காதில் கேட்ட காட்சி வரை”.

இவையனைத்துடன் ,அவளுக்காக அவள் வாங்கிய அதையும் அறைக்கு எடுத்து வந்தாள்.

கிழக்கு - |||

" ஹேய் ஹேய் ...ப்ளீஸ் போன் ஆ கட் பண்ணாத...."

திரும்பவும் கூப்பிட்டான்...அவள் எடுக்க வில்லை...பதினெட்டாவது முறை கூப்பிட்டான்..."

அவள் எடுத்தாள்..ஆனால் பேசவில்லை ..பொய்கோபம் அடக்கி கொண்டு பேச ஆரம்பித்தாள்

"சரியா பேசி மூணு நாள் ஆகுது...வெள்ளிகிழமையே வேலை முடிஞ்சிடும் சொன்னீங்க...

இன்னைக்கு திங்க கிழமை ஆச்சி......"

அவன் குறுக்கிட்டான்..." நாளைக்கு காலைல உன் முன்னாடி

நான் நிக்கலேன்னா ..அப்புறம் நீ கேளு”

சாயங்காலமே மேனேஜர் சொல்லிட்டார்.."நாளைக்கு காலைல

விமானம் புடிக்கிறீங்க..எல்லாத்தையும் மறக்குறீங்க ....ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க...அப்படியே பிரசன்னாவிடம் ஒரு சாரி சொல்லிடுங்க..."...

“அப்புறம் இன்னொரு முக்கியமா விஷயம் ...நீ சொன்ன திட்டா கூடாது”...

"சொல்லுங்க சார்" ....

"ம்...அதாவது...இன்னும் இன்னைக்கு ஹோம் வொர்க் முடியல...கொஞ்சம் வொர்க் பெண்டிங் ல இருக்கு"....நான் வேலைய முடிச்சிட்டு கூப்பிடுறேன்.மணி இரவு ஒன்பது பதினொன்று.வீட்டில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தன.விளக்குகள் கூட்டத்திற்கு உகந்தது.இருட்டு மட்டுமே தனிமைக்கு
உகந்தது.செல்போன் கையிலே இருந்தது.அவனுடைய அழைப்பிற்குதான் காத்திருக்கிறாள்......

அனைவரின் நெஞ்சதையும் உலுக்கிய சம்பவம் தான் கிழக்கு - IV

அவளின் நெஞ்ச உளைச்சலின் சம்பவம் தான் மேற்கு - IV ...

அவன் வேலை முடிச்சிட்டு விடியகாலையில் கடைசியா ஏறியது 'flight 11 from Boston to Los Angeles'.....(http://en.wikipedia.org/wiki/American_Airlines_Flight_11)

அவ கடைசியா எடுத்துட்டு போன அந்த பொருள் ..வேறொன்னுமில்லை ' ஒரு முழு நீள கயிறு...'(http://www.usc.edu/student-affairs/dt/V144/N40/01-stu.40c.html)

தாக்குதலின் தாக்கத்தால்,

செல்வேந்திரன்.

Sunday, March 07, 2010

சுவர் கடிகாரம்

உறக்கம் வரவில்லை.அனால் படுக்கும் நேரம் தான்.
மணி எத்தனை என்று பார்க்கலாம் தான் அந்த பச்சை
நிற சுவர் கடிகாரத்தில்.ஆனால் சில வருடங்களாய் அதில்
மணி பார்ப்பதை விட்டிருந்தேன்.கண்களை மூடிக் கொண்டேன்.
அங்கே அக்கடிகாரத்தின் டக் டக் சத்தமும், என் இதயத்தின் லப்டப்
சத்தம் தவிர வேற எந்த சத்தமும் இல்லை.

என் குடும்பம் மிகச் சிறியது.அம்மா அப்பா நான்.
அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதை நான் ஆறு வயதிருக்கும் போதிலிருந்தே என் அப்பா அடிக்கடி
சொல்லுவார்.அம்மா அப்பாவை திட்டுவார்கள்.அப்பா கண்டு கொள்ள மாட்டார்.
அவனுக்கு தெரியனும்டி மட்டும் சொல்லுவார்.தொலைக்காட்சி பெட்டியில்
பாடல் காட்சிகள் வரும்பொழுது அப்பாவையும் , அம்மாவையும் கற்பனை
செய்து பார்ப்பேன்.அம்மா கேட்பார்கள்.ஒன்றுமில்லை என புன்னகைப்பேன்.

அப்பா அம்மா சண்டையிட்டு நான் பார்த்ததாய் நினைவில் இல்லை.
அவ்வளவு அன்பாய் இருப்பார்கள்.அவர்களின் ஒற்றை வானம் நான்.
என்னை விட்டு விலகியதே இல்லை.அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்
அப்பா அம்மாவை முத்தமிடுவார்.அம்மா ...'பையன் முன்னாடி முத்தமிடாதீர்கள் என்று
எத்தனை தடவை சொல்லிருக்கேன்' என்று செல்லக் கோபம் காட்டுவார்.பையன் முன்னாடி
சத்தம் தான் போடக் கூடாது...முத்தம் போடலாம் என்பார் அப்பா.

பாருங்கள்.எப்பவுமே இப்படித்தான்.அப்பா அம்மா என்றாலே நினைவுகளில் மூழ்கிப்
போய்விடுவேன்.நான் கண்மூடி நினைத்து பார்க்க நினைத்த விசயமே வேறு.
ஆம்.அந்த பச்சை கடிகாரம் தான்.காதல் திருமணம் என்பதால் அதிக கூட்டம்
வரவில்லையாம்.ஏன் இருவரின் பெற்றோர் கூட வரவில்லையாம்.அப்பாவின்
நெருங்கிய நண்பர் ஒருவர் தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தாராம்.
அவர் குடுத்த திருமணப் பரிசு தான் அந்த பச்சைக் கடிகாரம்.அப்பா ..திருமண புகைப்படம்
கூட வீட்டில் மாட்டியதில்லை.அக்கடிகாரம் மட்டும்தான் நம் காதலுக்கும் என் நட்புக்கும்
ஒரே சாட்சி என்று சொல்லிவிட்டாராம்.

அக்கடிகாரம் இரண்டு கண்டங்களில் இருந்து தப்பியதாக
அம்மா அடிக்கடி சொல்லுவார்.ஒன்று என்னிடம்.ஒரு பொருளையும் நான் உடைக்காமல்
விட்டு வைத்தது இல்லையாம்.அப்பா அவருக்கு திருமண நாள் பரிசாய் வாங்கிக்
குடுத்த அந்த கண்ணாடி தாஜ்மஹாலை கூட உடைத்து விட்டேனாம்.அம்மா
துடித்துப் போய்விட்டாராம்.ஆனால் என் முன்னால் அழுததாயோ , அதற்காக
என்னை அடித்ததாகவோ எனக்கு நியாபகமில்லை.ஆனால் அதற்குப் பிறகு
அப்பா திருமண நாள் பரிசு வாங்குவதில்லை.அப்பா அம்மாவை முத்தமிட்டு பின்
இத எப்படி என் பையன் உடைக்கிறான் பார் என்று சிரிப்பார்.

அடுத்த கண்டம் 1984 இல் வந்த அந்த வெள்ளம் தானாம்.
எல்லை மீறிய வெள்ளம் எல்லா பொருள்களையும் அடித்து
போய்விட்டதாம்.அப்பா அம்மாவின் திருமண புகைப்படம் அடங்கிய
அந்த இரும்பு பெட்டி உட்பட.எனக்கும் அந்த வருத்தம் நிறைய இருக்கிறது.
எனக்கு மங்கலாய் நியாபகம் இருக்கிறது அந்த புகைப்படங்கள்.
அழுகை,வருத்தம்,சந்தோசம்,எதிர்பார்ப்பு,கனவு,ஆசை,அப்பா
எல்லாத்தையும் தாங்கிய அம்மாவின் கண்கள் அந்த புகைபடத்தில் அப்படியே
அச்சடிக்கப் பட்டிருக்கும்.ஏதோ உயரத்தில் மாட்டியிருந்ததால் அந்தக் கடிகாரம்
மட்டும் தப்பியது.

அப்பா இறந்த அன்று ...எஞ்சியிருந்த அழுகையும் வெளியேற்றி விட்டு
விட்டத்தை பார்த்து பின் அக்கடிகாரத்தை பார்த்தேன்.அந்த கடிகாரம் ஓடாமல் நின்றிருந்தது.அதன் பிறகு
அம்மா அடிமனதிலிருந்து சிரிக்கவே இல்லை.சில வருடங்களில் அம்மாவும்
இருந்து விட்டார்.அன்றுதான் அந்த கடிகாரத்தை சரி செய்தேன்.
அன்றிலிருந்து ஓடும் இந்த கடிகாரம் இன்னும் நிற்கவில்லை.
அன்றையிலிருந்து தான் இந்த கடிகாரத்தில் நான் மணி பார்ப்பதை
நிறுத்தியிருந்தேன்.நான் நொடி முள்ளாகவும், அம்மா அப்பா பெரிய சிறிய
முற்களாகவும் எண்ணிக் கொண்டேன், எண்ணிக் கொண்டிருக்கிறேன்...
எண்ணிக் கொண்டிருப்பேன்....

செல்வேந்திரன்
Monday, February 22, 2010

முகம் நிமிரும் நொடி...இத்தனை தூரம் உருண்ட போதிலும்
இருமலைகள் கடந்த போதிலும்
பிரிவுபயம் காரணமாய் பெருமூச்சாய்
போகாமல் மௌனமான சக்கரக்காற்று...

இருகைகளும் அவளிடுப்பை சுற்றும்
தவம் பலித்த மகிழ்ச்சியில்
ஒற்றை காலை தரை பதித்து
ஒரு பக்கமாய் சரிந்தது அவ்வண்டி

அவள் கைப்பட்ட வாக்கியம் ஒன்று
கம்பிவழி மின்சாரமாய் காதடைந்து
கவியும் இசையும் கலந்த
பாடலாய் அவளிதயத்தில் இறங்கியது

மேற்புறமாய் முகம் தூக்கும்போது
வலப்புறமாய் தன்முகம் திருப்ப
தயாராய் இருந்த கணத்திலெடுத்த
புகைப்படம்தான் நீங்கள் மேலே பார்த்தது.....

Wednesday, February 03, 2010

சிறு ஒளி ! பெரு மகிழ்ச்சி !!கடல்தாயின் கருவில் உதித்து
அலைமடியில் மெதுவாய் தவழ்ந்து
மணலேறி மரமேறி உச்சிவந்த
கானல்நீர் வெளிச்சம்

வானத் திரை தினம்விலக்கி
அங்குமிங்கும் ஆடும் குழந்தைக்கு
உண்ணுஞ் சோறின் நிறங்காட்டும்
கண்குளிரும் வெளிச்சம்

காற்று வந்து கலைத்திடுமென
அவசரத்தில் மேல்நோக்கி பெய்த
மேக மழை துளிகளின்
கண்ணுறுத்தா வெளிச்சம்

உலகம் போற்றும் இவ்வெளிச்சங்கள்
ஒன்றுமில்லை ! பிறந்த நாளில்
காதலியின் மகிழ்முகம் காட்டி
மரித்துவிட்ட மெழுகுவர்த்தியின் முன்பு....