Friday, November 10, 2006

கவிதை எழுத வருவதில்லை !













அண்ணன் மழலையை கொஞ்சும்போது

அன்றைய மழையை கொஞ்சிக்

கவிதை எழுத வருவதில்லை !

உறவுடன் ஒன்றாய் உண்ணும்போது

கொரிக்கும் அணிலின் அழகுகண்டு

கவிதை எழுத வருவதில்லை !

கடுங்குளிரில் முகம்போர்த்தி உறங்காமல்

முகமூட மேகமிலா நிலாக்கண்டு

கவிதை எழுத வருவதில்லை !

ஐந்துநாள் அழுவலக ஐக்கியத்தில்

ஆறாம்நாள் சிந்தித்துச் சிலவரி

கவிதை எழுத வருவதில்லை !

கவிஞனாய் வாழ நினைத்தாலும்

கடமையில் மூழ்கி உழைக்கும்போது

கவிதை எழுத வருவதில்லை !

ஒரு கவிதை எழுத வருவதில்லை !



Friday, November 03, 2006

அன்னை














ஆர்வமா யமர்ந்தேன் அறையினிலே
அன்னைக்காய் ஓர் கவிதையெழுத‌
'அன்னை' தலைப்பெழுதி அடுத்தவரி
எழுதுமுன் அறைக்குள் அம்மா !

தாங்காதடா தாயின்மனம்
உன்னோட கண்ணுக்கும்
என்னோட கண்ணுனக்கும்
ஏதும் ஆகுமென்றால்

அவளேற்றிய விளக்கையும்
என்‍தலைகோதிய வலக்கையும்
பார்த்து பார்த்து ஆழ்ந்தது
என்மனம் சிலகணம்

முதல்வரிக்காய் மீண்டும் மூழ்கியபோது
மீண்டும் அறைக்குள் அம்மா

வேர்க்குதாப்பா ? என்றாள்
என் வியர்வையை துடைத்தபடி
வேர்க்கலம்மா ? என்றேன்
என் வியர்வையை மறைத்தபடி

முதல்வரிக்காய் மீண்டும் மூழ்கியபோது
மீண்டும் அறைக்குள் அம்மா

ப‌திய‌ம் போட்ட‌ செடியும்,
ம‌தியம் சாப்ட‌ வ‌யிரும்
காய‌க்கூடாதுடா கைக‌ழுவு
சீக்கிர‌ மென்றாள்.

வ‌யிறாற‌ உண்டுவிட்டு தாயின்
ம‌டியாற‌ த‌லை சாய்த்தேன்
'அன்னை' த‌லைப்பு ம‌ட்டுமே
க‌விதையாய் அக் காகித‌த்தில்..

அன்புடன்
ந‌ வ‌ செல்வேந்திர‌ன்