Wednesday, July 30, 2008

கதா நயாகனா ? காகம் நாயகனா ?சுகமாய் பறந்தவன் வீழ்ந்தான் விமானத்திலிருந்து
கோளாறு என்னவென யோசிக்கும் முன் பார்த்தால் கீழாறு
தரையில் கூட இவ்வளவு அழகாய் ! அதிகமாய்
குட்டிக்கரணங்கள் அடித்திருக்க முடியாது

அவன் விழ்ந்த வேகம் பார்த்த
மேகமும் விலகி ஓடியது

பூமியில் வீழும் அவன் நிழலை பிடிக்கவா
வேகமாய் ஓடுகிறான் என்றபடியே வெயிலில்
மெதுவாய் நகர்ந்தது சூரியன்....
சூரியனின் உள்மனதில் இன்னொரு எண்ணமும் ஊஞ்சலாடியது
கொடுத்து வைத்தவன் நிழல் அவனுக்குண்டு ...
நமக்கில்லையே எண்ணியது ஏக்கமாய்..

காற்றின் பெருமை அன்றுதான் புரிந்தது.
வீழும் வரையாவது உயிர் வாழட்டுமென
முகத்தில் மோதியபடி வந்தது...

விலகி போனாலும் மனம் தாளா மேகம்
வீட்டை விட்டு ஓடிய மகனை நினைத்த தாய்
போல் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது

ஆற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால்
அவன் ஆயுளின் நீளம் அதிகமாக இருந்தது..
திரவத்தில் வீழ்ந்தாலும் திடமாய் இருந்தது அவன் மனது ..
உயிர் பிழைப்போமென..

சுடும் காற்றில் வந்த கதகதப்பாலும்
ஆற்றில் நனைந்த சொதசொதப்பாலும்
மயக்கம் உறக்கமாய் மாறியது

கரை ஒதுங்கினான் ஒரு வழியாக..அவ்வழியில்
பலர் வந்தாலும் அவனை யாரும் கண்டுகொள்ள வில்லை.
கதாநாயகியாக இருந்திருந்தால் வந்தவர்களெல்லாம்
கதாநாயகர்களாகி இருப்பார்கள்.
அவன்தான் நம் கதையின் நாயகன் ஆயிற்றே

ஆற்றினருகே உள்ள குழியில்
அவனையறியாமல் வீழ்ந்து விட்டான்.
இவன் கண் விழித்ததும்

வெளிச்சம் கண் மூடிக் கொண்டது
தந்தை பணிக்கு சென்றது பணியாத பிள்ளைகள் போல
சருகுகள் அங்குமிங்கும் பறந்தன..

இத்தனிமை சிறைவாசம் எத்துனை மணித்துளிகள்
எத்துனை நாழிகைகள் என்றே தெரியவில்லை அவனுக்கு
இருட்டு இவ்வுலகை ஆக்ரமிக்கும் போட்டியாக
அக்குழியை ஆக்ரமித்தது ஆற்றின் ஓரமாய் ஒழுகிய நீர்

பசித்த அவனுக்காக பாட்டு பாட
பாரதியார் இல்லையங்கே ஜகத்தினை அழிக்க வேண்டாம் !
தாகத்தையாவது தீர்ப்போமென
தண்ணீரை தீர்க்க ஆரம்பித்தான்

குழிஎங்கும் நீர் பரவியது போல்
அவன் உடலெங்கும் வழி பரவியது
உடலெங்கும் வீக்கம் ! உயிர் வாழும் ஏக்கம்
உடனே அக்குழியை விட்டு வெளியேற துடித்தான்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமது போல
தண்ணீர் கரைத்து கரைத்து திட மண்ணும் சேறாய் மாறியது
அதனுள் புதைந்த அவன் கால்கள்
மண்ணுள் புதைந்த வேர் போல மறைந்தது

பலநாள் முயற்சியின் பலனாய் குழியை விட்டு
முதலில் வந்தது தலை
விதையை விட்டு வந்த முதல் இலை

சுதந்திர போராட்டம் கூட சீக்கிரம் முடிந்திருக்கும்
அவ்வுயிர் வெளிவரும் போராட்டம் தொடர்ந்து
கொஞ்சம் கொஞ்சமாய் அவன் உடலும்
அவன் கிளைக்கைகளும் மேலே வந்தன..

வழுவிழந்தவனை வம்பிற்கு இழுப்பது போல் வீசியது காற்று
காதலியின் சொல்லுக்கு தலையாட்டும் காதலனை போல்
காற்றின் சொல்லுக்கு தன்னுடலை ஆட்டினான்...
தூரத்திலிருந்து பார்த்தால் சிறு செடி ஆடுவதாய் நம்பிருப்பார்கள்
முயன்று முயன்று நீட்டினான் மரக்கிளைகளாய் கைகளாய்

சூரியனும் , சந்திரனும் இதை தினம் தினம் பார்த்தாலும்
சந்திக்கும் பொழுது பேசுவதற்காக நிகழ்ச்சிகளை
சேமிக்கும் காதலர்களாய் காத்திருந்தார்கள்..

அவன் கைகளில் அமைதியாய்
வந்தமர்ந்தது ஒரு கருங்காகம்
காகம் கொத்தியதால் அவன் விரல் நுனிகளில் வீக்கமா ?
இவன் விரல் நுனி வீக்கங்களை காகம் கொத்தியதா ?.........

பொறுத்திருந்தது போதுமென முடிவெடுத்தது காகம்
சுட்ட பாட்டியும் ! சுட்ட வடையும் !! இல்லாததால்
விரல் நுனி வேப்பம்பழத்தினை கவ்வியபடியே பறந்தது...
.........
..................
................................
........................................
சுகமாய் பறந்தவன் வீழ்ந்தான் விமானத்திலிருந்து
கோளாறு என்னவென யோசிக்கும் முன் பார்த்தால் கீழாறு

[வேப்ப மரத்தின் சுழற்சி..ஒரு கற்பனை கதையாக]

தாய் கண்ணீர் !


கருவாய் நீ உருவாகியதை

கணவனிடம்கண்ணால் கூறும்பொழுது வரும் ஆனந்த நீர்

அடிக்கடி தடவிப் பார்த்து எப்படி தவிக்கிறாய்
என்றபொழுது குவளையாக வரும் கவலை நீர்

புரண்டு படுத்தால் புண்படுமென
ஒரே நிலையில் படுப்பதால் வரும் பாச நீர்

எட்டி உதைக்கும் பொழுது உன் கால்
வலிக்குமென உருகும் நொடியில் அது உன்னத நீர்

பத்து மாதம் பையிலிருந்த நீ
பக்கத்தில் படுத்தவுடன் வந்த பொன்நீர்

உன்னலழுகையின் காரணமறிந்து ஊட்டுவாள் தாய்ப்பால்
அழுகை சத்தம் அனைத்தும் சத்தமாய் மாறும்பொழுது அது அன்பு நீர்

பள்ளிப்பாடம் செய்யாமல்
தடியடி வாங்குவாய் தந்தையிடம்
அறிஞர்கள் கூட ஆடி போவார்கள்
அடிபடாமல் அழமுடியமா என உன்தாய் பார்த்து

நீ பரிட்சைக்கு படிக்கும்பொழுது அவள் படிப்பாள் உன்னை
உறக்கம் உன் கண்ணை வருடும் நேரம் உனெதிர்காலம் நினைத்து ஊமைக்கண்ணீர் வடிப்பாள் உன் அன்னை

கல்லூரி காதலில் கவலையுடன் தாடி வளர்ப்பாய்
காரணம் கேட்ட கணவனிடம் மூடி மறைத்து
பின் தலையனை மூடி மறைத்து முகம் நனைப்பாள்

வேலை கிடைக்காத விரக்தியால் நொடிந்து போவாய்
நொடி நொடியே நினைத்து கண்ணீர்
படிகமாகும் அவள் கன்னம்

மனைவியின் பேச்சுக்கு மறுமொழி பேசமாட்டாய்
சிறுவயதில் நீ எப்பொழுது பேசுவாய் என்ற ஏக்கம்
மீண்டும் வருவதால் வரும் அமைதிக் கண்ணீர்

முதியோர் இல்லம் சேர்ந்த பின்
முடிவிலா கண்ணீர் விடுவாள்
தன்னிலை நினைத்துதான் இந்த தாய்நீர்
எனநினைப்பார் அருகிலிருந்த அகதியாகப்பட்டவர்கள்
உன் பின்னிலை நினைத்துதான் அந்த அழுகை
என்றவுண்மை அவள் மனம் மட்டுமே அறியும்

மரணப் படுக்கையிலும் மன்றாடுவாள் இறைவனிடம்
என் மகன் நலம் காப்பாயென
காலன் கடத்திச் சென்ற உந்தாயை நினைத்து
கடவுள் கூட கண்ணீர் வடிப்பான்

தாயின் பெருமையை உணர்ந்துவிடு
கவிதையின் தலைப்பை துடைத்துவிடு

Tuesday, July 29, 2008

காலம் கனியும்ஓடுகின்ற மேகமாய் எண்ணங்கள்
பொழிகின்ற மழையாய் செயல்கள்
விளைகின்ற கனியாய் பலன்கள்.

உயர் எண்ணங்கள் இல்லையேல்
கனிக்கான கனவேது

எண்ணங்கள் மழையாகாமல்
எக்கனி உன் வாய்க்கு

மேகமும் சூழ்ந்ததே
மழையும் பொழிந்ததே

கனியை காணோமா
கவலையுறாதே .... காலம் கனியும்

Monday, July 28, 2008

சிறந்தது எது ?சிறந்தது எதுவெனவறிய
திறந்தது மனது...

பரந்து விரிந்த வானம் பார்த்தேன்
பரவசமடைந்ததுதான் சிறந்தது என்றிருக்கையில்

எண்ணிலா கைகளால் என்னை தொட்டான் பகலவன்
ஆகா ...இவனல்லவோ இயற்கையின் இருமாப்பு
பட்டம் பகலவனுக்கே ...பார்த்தேன் மேலே ...

என்னை மறந்து விட்டாயே என்றது ஏக்கமாய்
அடடா...உன்னையா மறந்தேன்..
உன்னாலல்லவா ..
விவசாய பயிர்களும்
விவசாயி உயிர்களும் வாழுகின்றன..
மன்னிப்பாய் மேகமே என்று மன்றாடிய பொழுது...

சற்றே குளிர்ந்து பூமி..குனிந்தவன் நிமிர்ந்தேன்..
குறுநகை புரிந்தது நிலா ...புன்னகையிற் சிறந்ததேது....

கலகல சிரிப்பொலியில் கவனம் சிதறினேன் ..
ஒரு நகைக்கே உருகி விட்டாயே ..
இப்பொழுதென்ன சொல்கிறாய் ?
எகத்தாளம் செய்தனர் நட்சத்திர நண்பர்கள் ...

தவறான ஆராய்ச்சியில் ஈடுபட்டோமோ
தனியாக வருந்துகையில் .....
உயிரிருக்க புலன்களை பார்த்து பூரிக்கிறாயே
என்றனர் போட்டியாளர்கள் ...

ஆம்..உயிரே ..நீயே சிறந்தவள் என
அமைதியானேன் ஆராய்ச்சி முடிவுடன்...

Thursday, July 17, 2008

மரணம் நல்லது ![the above photo is taken from google]

பூ மரித்தால்தான் காயும்,கனியும்
கனி மரித்தால்தான் விதையும், விருட்சமும்

குளிர் காற்றுடன் மேகம் விபத்தாகாமல் போனால்
ரத்தத்துளிகள் ஏதிங்கே பூமிக்கு

மண்புழு தூண்டில் தூக்கில் தொங்கியதால்தான்
இன்று வலைவீசி வாழும் வரை வந்திருக்கிறோம்

அலைகளின் மூச்சு அடங்காமல் போனால்
கரைகள் ஏது ! கால் நனைபெப்படி !!

சூளையில் செங்கல் தீக்கிரையாகாமல் போனால்
சூரிய வெப்பம் தாங்கும் கட்டிடங்கள் இங்கேது

தாவி வந்த தண்ணீர் துளிகள் தற்கொலைக்கு தயங்கினால்
கண்ணுக்கினிய அருவிகள் எங்கே

சிலநொடி வாழ்வதால்தான் வானவில்லுக்கு
தினம் சுற்றும் சூரியனை விட விசிறிகள் அதிகம்

பூகம்பம் பூமித்தாயின் கருவிற் கலைந்தால்தான்
கலங்காமல் கண்ணுறங்கும் கண்ணீர் விழிகள்

மழைத்துளி மண்ணில் புதைந்தால்தான்
நிலத்தடி நீர் நீடுடி வாழும்

ஆங்காங்கே செல்கள் மரித்தால் தான்
அழகான மச்சங்கள் அங்கத்திலே

மரணம் மட்டும் இல்லையெனில் இருக்குமா
குழந்தையின் பிறப்பு இனிமையாக

வேண்டும் ! நமக்கு இயற்கை மரணம்
வேண்டாம் !! நம்மால் இயற்கைக்கு மரணம்

இயற்கையாய் நிகழும் மரணம் எதுவும் தவறில்லை
நீ தவறினாலும் இயற்கைக்கு என்றும் மரணமில்லை

மரணம் நல்லது ! இயற்கை மரணம் நல்லது !!