Wednesday, October 31, 2007

மழையினில் நனைகையில் !குளித்துவந்த மனைவியை மீண்டும்
குளிக்க வைக்கும் கணவனாய்
காய்ந்திருந்த சட்டையை மீண்டும்
நனைத்தது மழை !

அவசரமாய் ஓடுகிறது மேகம்
தவறவிட்ட சில்லரைகளாய் மழைத்துளிகள்
சில்லரைகள் இல்லையென்றால் எல்லாம் கல்லறைதாம்
கல்லறை போகும்போது ஒற்றை சில்லரைதாம்

ஓசோன் ஓட்டையில் ஓலுகையில்
மனிதன்மேல் மனங்கசந்த மழை
சிறுகுழந்தை கைப்பட்டதும்
சிரித்து இறந்தது.

விழும் துளிகளை தட்டிதட்டி
நகைக்குது மழலை
வீழும் துளிகளை தட்டிதட்டி
பறக்குது பறவை
இரண்டும் மழைக்கின்முகம் காட்டுபவை.

அன்று நான் குளித்த அருவி
இன்று மழையில் தனியாய் குளிக்குமோ
இன்றைய என் மனித பிறவி
நாளைய மழையாய் மாறிப் பிறக்குமோ

மை தீர்ந்ததும்
கவிதையை முடித்தேன்
மழை தீர்ந்ததும்
கவிஞனைத் தொலைத்தேன் !

அன்புடன்

ந வ செல்வேந்திரன்.

Friday, July 27, 2007

பெயரில் என்ன இருக்கிறது ?
ஓய்வடையா ஓடை நீ
ஒரு நொடியில் நின்றதேன்

தேங்காய் சுமந்தாடும் தென்னையே
ஆடாமல் அயர்ந்ததேன்

சுட்டெரிக்கும் சூரியனே
சுபாவம் மாறி சொலித்ததேன்

மழைக்கரு சுமக்கும் மேகமே
மாம்ரம் கண்டதும் நின்றதேன்

அவசரமாய் சென்ற நான்
அடியாத்தி நின்றதேன்

ஓவியத்தில் ஓரோரமாய் தீட்டியிருந்த
அவள் பெயரினை மனம்படிக்க
அவளை நினைக்க சொல்லி
பின் அது அடம்பிடிக்க

இப்பெயரினை எங்கு பார்த்தாலும்
இமைக்காமல் இருநொடி நிற்பதேன்
ஆண்டுகள் பலவாயின் சளிக்காமல்
அவள் நினைவு இருப்பதேன்....

அன்புடன்,
செல்வேந்திரன்.

Tuesday, July 10, 2007

கவின் காட்சிக்கொரு இரங்கற்பா !
பலநாள் பெய்திருந்த பெருமழையில்
சிலதாய் மீந்திருந்த சிறுகிளையில்
அப்பொழுதாய் துளிர்த்திருந்த இலைநடுவில்
எப்பொழுதும் சிரித்திருந்த மலரின்மேல்
சமைந்தவளின் சருமத்தை முகர்ந்தவண்டு
மலரின் தேனமுதை சுவைத்ததின்று

விதவிதமாய் தேன்சுவையை கூட்டில்வைத்து
வரவேற்க வாசலிலே காத்திருந்தும்
கண்ணகியிற்பால் காதலுற்ற கோவ()ண்டின்மீது
கொட்டிவிடும் கோபமுற்ற மாதவித்தேனீ

மதி மயங்கும் மாலையிலே
மழை ரசிக்கும் சோலையிலே
அரங்கேறியது அழகான சிலப்பதிகாரம்
அதைரசித்த புற்களின் ஆரவாரம்

திட்டமிட்டு நாடகம்தான் நடந்திருக்க
கோடாரியுடன் நடந்துவந்தான் கொடுங்கோலரசன்
கதைமுடிந்து கண்ணகிதான் எரிக்குமுன்னே
கயவனவன் எரிப்பதற்காய் வெட்டினானே

எரிந்துபோன மதுரையையே மீட்டிவிட்டோம்
எரியப்போகும் மரத்தினை மீட்கலையே
இரக்கபட்டு கோடாரியை இறக்கப்பா
இல்லையேல் இக்கவின்காட்சிக்கோர் இரங்கற்பா !!

Friday, June 29, 2007

விழி !!!எந்தன் விழியொரு கேள்வி
உந்தன் விழியதன் விடை
விடை கண்ட கேள்வி இறங்கவில்லையே ?
இன்னும் உறங்கவில்லையே :)

Thursday, June 07, 2007

எம்மொழியும் சம்மதம் !தமிழ்மாதம் தன்னை மறந்துவிட்டு
டிசம்பர் என்ற வார்த்தையினை
திசம்பர் என்று எழுதிவைத்து
தாய்மொழி காத்தோம் ! வாய் முழங்கினார்

படத்தின் பெயருக்கா வரிவிலக்கு
பதிப்பகமொன்றை நிறுவி நடத்து
சிறந்த எழுத்தாளர்களை தத்தெடுத்து
சீரிய தமிழை வீரியமாக்கு

தமிழகத்தில் அயல்மொழியும் கொஞ்சம் பேசு
அயலகத்தில் தமிழைப் பற்றி அதிகம் பேசு
அயலவனும் ஆர்வமாய் கேட்டிடட்டும்
ஆராய்ச்சிக்காய் வேட்டிகட்டி வந்திடட்டும்

எம்மொழியும் சம்மதமெனும் எழதுகோல்
போல் ஆவேனா
வரும்வழியில் வழிகேட்ட அயலவனுக்கு
அவன்மொழியில் வழிதான் சொல்வேனா

பிறமொழி பேசிப் பழகாதவன்
பறவைமொழி எங்ஙனம் கற்றிடுவான்

தாய்மொழியை ஆயுள்வரை வளர்ப்பேனா
பிறமொழியும் முடிந்தவரை கற்பேனா
அடுத்தவீட்டுப் பிள்ளையுடன் விளையாட
அதைக்கண்ட அன்னைத்தமிழும் மகிழ்வாளே

அன்புடன்,
செல்வேந்திரன்

Thursday, April 19, 2007

நீ வருவாய் என !
தாய்வந்து தேட சிறுவயதில்
ஆடினாய் நீ கண்ணாமூச்சி
நீவந்து சேர ஏங்கியதால்
என்னுடல் இப்படியாச்சி

உடல்விட்டு உயிர்
போனால் பிணமடா
உனைவிட்டு உண்ணாமல்
அழுகிறேன் தினமடா

சொல்லிவிட்டா பிறந்தோமென
சொல்லாமல் போனாயடா
கொள்ளிவைத்து இறந்தேனென
இல்லாமல் போகுமாடா

நீ பிறந்தபின் கணவனுக்குதான்
கடைசி சாப்பாடு
நீ போனதினால் கணவனால்தான்
வாய்க்கரிசி ஏற்பாடோ

பெண்ணாய் நான் பிறந்ததினால்
இரண்டானது வீடெனக்கு
கண்ணா நீ தொலைந்ததனால்
இருண்டுபோனது வாழ்வெனக்கு

பாலூட்டிய மார்பிரண்டும் துடிக்குதடா
சிரிப்பூட்டிய உன்சிறுமுகமும் தெரியுதடா
தினம்தேடி என்னிதயம் வெடிக்குதடா
எந்நாடியும் துடிக்காமல் அடங்குதடா

உந்தன் 'காணவில்லை' சுவரொட்டியை
எந்தன் 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி
மூடுமுன்னே ஓடோடி வந்துவிடு
மூடும்கண்களை மெதுவாய் திறந்துவிடு

அன்புடன்,
ந வ செல்வேந்திரன்

Monday, March 26, 2007

கவிதைப் போட்டி !

அன்புடன் குழுமம் நடத்தும் கவிதைப் போட்டியின் அறிவிப்பு இது...நண்பர்கள் கலந்துக் கொண்டு எங்களை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.உங்கள் நண்பர்களுக்கும் தகவல் தாருங்கள் அவர்களையும் பங்கு கொள்ளச் செய்யுங்கள்

நன்றி

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"

எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-

எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.
--

குழுமம் : அன்புடன்
வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்

Friday, February 23, 2007

பயணங்கள் முடிவதில்லை !


[வீடு]
சட்டென எழுந்தேன் பட்டென போர்வையை விலக்கி.பார்த்தால் பக்கத்தில் தொலைபேசி ! அது அலறியதால் நான் எழுந்தேனா ?
நான் எழுந்ததால் அது அலறியதா ? என அதிகாலையில் ஒரு பட்டிமன்றம்.ஆம் ! நான் இரவு பத்தரைக்கு நானே எழுதிய ஐந்தரை தூக்கு.ம்ம்ம்..என்னை எழுப்பிவிட்டு அது நிம்மதியாய் தூங்க ஆரம்பித்தது.

[
புகைவண்டி நிலையம்]
இரவுப் பேருந்தை இழந்த எனக்கு ஆறுதலாய் அதிகாலை பயணம்.
வழியனுப்ப வந்த அண்ணனிடம் விடைபெற்று
ஒலியெழுப்பி சென்ற இரயிலிடம் கேள்வி கேட்டேன்."எப்படியாவது நேரத்திற்கு சென்றுவிடுவாயா ?".பதிலை செயலில் காட்டியது.

[பயணம்]
உட்கார இடமில்லை என்றால் கூட கவலையில்லை.பயணம் முழுதும் பார்த்து வர ஒரு பெண் இல்லை என்பதுதான் அப்போதைய பெருங்கவலை.கவலையை மறக்க கம்பிகளுக்கு வெளியே பார்வையை செழுத்தினேன்.அங்கே கவலை இறந்து கவிதை பிறக்க ஆரம்பித்தது.

"
கழிவறை கூச்சம் போகவில்லையென
இரயிலடி எச்சம் போகவந்த
குழுவொன்று செடிமறைவில் செலுத்தினர்
தத்தம் காலைக் கடனை"

"
கூட்டமாய்வந்த குழந்தைகள் பத்தில்
பாதி சென்றது சுள்ளிக்காய்
மீதி சென்றது ள்ளிக்காய்‍‍‍‍ ‍ அதில்
பாதி சென்றது சோறுக்காய்
மீதி சென்றது ஊருக்காய்"

"
இன்னா செய்தாரை யொறுத்தல் அவர்நாண
ன்னம் செய்து விடல்‍"
"
திலுக்கு கையசைக்கா விடினும் சிறுகை
ஆட்டிச் சிரித்து விடல்"

"
சோலை கொல்லை பொம்மைக்கு
சேலை ட்டிப் பெண்மைக்கு
வீரளித்து விரைந்து ந்தார்
காலம்போனபெண்ணுரிமை பெரியர்"

"உப்புத்தண்ணீரை உள்வாங்கி இனிப்பாய்
ரும் ரும்புத் தோட்டம்
சொட்டுச்சாறை சேர்ந்துஉண்டு சுகமாய்
ஊறும் எறும்புக் கூட்டம்
ன்காரஅரிவாள் ழுத்தில் விடா
கைஅருவாளுடன் அறுவடைக் கூட்டம்
காட்சிக்கவிதை உண்டுஉண்டு குறையா
தெந்தென் இயற்கை நாட்டம் "

பயணங்கள் முடிவதில்லை ! பயணங்கள் முடிவதில்லை !

‌..செல்வேந்திரன்