Monday, December 18, 2006

அம்மா !

இவ்வார்த்தை உச்சரிக்கப் படுகிறதோ ? இல்லையோ
உணரப்படாத உயிரினம் உலகில் இல்லை

மழையாக ! காற்றாக !
கடலாக ! மரமாக !
பனித்துளியாக பிறக்க ஆசைப்பட்டேன்

அவைக்கெல்லாம் தாயில்லை என்ற கணமே
தூக்கியெறிந்தேன் என் அற்ப ஆசையை

இறந்தபின் சொர்க்கமோ ? நரகமோ ?
கவலையில்லை கண்திறக்கும் காலம்வரை
வசித்தது சொர்க்கம்தான்

அம்மா ! உனக்காக நீ வைத்துக் கொண்டது
உன் பெயர் மட்டும்தானா ?
இன்றுவரை அணிகலன் அணியும்

ஆசை உனக்கில்லை ! ஆசை வேண்டாம் இனிமேலும்
தங்கத்திற்கோ ! வைரத்திற்கோ அத்தகுதி இன்னும் வரவில்லை

நீ பின்பற்றும் திருக்குறள் நான்கைந்து
நான் பின்பற்றும் ஒரே திருக்குறள் அது நீயன்றோ

உன் தாய்தந்தை சென்றடைந்தது சொர்க்கமா ? நரகமா ?
கவலை வேண்டாம்..எங்களின் சொர்க்கத்தை படைத்துவிட்டு
அவர்கள் நரகமா ?சென்றிருக்க முடியும்

நத்தை கூட அவ்வப்போது
கூட்டை விட்டு எட்டிப் பார்க்கும்
என்றேனும் ஓர் நாள்
வீட்டை விட்டு உன்மனம் சிந்தித்திருக்குமா

எனக்கான வேலை கிடைத்தவுடன்
உனக்கோய்வு கொடுத்திருப்பேன்
பின்புதான் யோசித்து அமைதியானேன்
அலுவலகம் இன்னுமோர் பிறந்த வீடல்லவா..

வேலைச்சுமையுடன் வீட்டுச்சுமையையும் கரைத்த இடமல்லவா !

முப்பத்தெட்டு ஆண்டுகளில்
முடிவடைந்தது உன் பணிக்காலம்
விடுமுறையில்லா பணியொன்று
நீ தொடர காத்திருக்கிறது
தாய்மையை தவிர வேறென்ன என் தாயே !


காலத்தின் கட்டளைக்கெல்லாம் கீழ்படியாதே
முதுமை ! இனி காலத்திற்கு மட்டும்தான்

ஊட்டி வளர்த்த மரத்தை
தாங்குமாம் ஆலவிழுதுகள்
விருதுகள் பலபடைக்காவிட்டாலும்
விழுதுகளாய் வாழ்ந்திடுவோம்

உன் சிம்மாசனத்தின் நான்கு
கால்கள் இனி நாங்களே


உன்னுடலை ஓர்நாள் மண்மூடும்
ஒரு அறை ! அந்த கருவறை திறந்து மட்டும் காத்திரு
கண்டிப்பாய் ஓர்நாள் நானும் வந்து சேர்வேன்..