Sunday, September 28, 2008

மழை இரவு



இன்று மட்டும் எடைகூடி
அசையாமல் நிற்கும் அடர்மரங்கள்
இமை மூடும் சுகம் கூடி
நனைவதால் எனக்கேது குளிர்சுரங்கள்

நீர் கலந்த தேன்
சுவைக்கும் வண்டுகள்
வசை பாடுமென
வாடும் சில மலர்கள்

இரவின் சுகம் கூட்டும்
பாடல்கள் இங்கில்லை
இலையில் உன் மெல்லிசை
காதோரம் ஈர்க்கும் வரை

எப்பொழுதோ சேதங்கள்
ஏற்படித்தி இருந்தாலும்
கவிதையாவது
காதலியின் நினைப்பும்
மழையின் நனைப்பும்

கவனிக்கவோ கலைக்கவோ
யாருமில்லை ...ஆதலாலே
அழகாய் இருக்கிறது
இரவும் மழையும் தனிமையும்

Monday, September 08, 2008

மழை



வெண்மேக விமான வெள்ள நிவாரண
பொருட்களோ மழைத் துளிகள்
பதறாதீர்கள் ! இலைக் குழந்தைகளே
வேர்த்தாய் பகிர்ந்தூட்டுவாள்

Thursday, September 04, 2008

அந்நிய நாட்டில் அகதியா



சொர்கமே என்றாலும் நம்மூரை
போல வருமா ...அதற்காய்
அயலகத்தில் வாழும் வரை
நரகத்தில் வாழ்வதாகுமா

உண்ணாத குழந்தைக்காய்
மனைவியை திட்டுவாய்
உணவு பிடிக்கவில்லையென

தொலைபேசியில் புலம்புவாய்

தமிழை பேசுபவன் தமிழன்
ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயன்
இரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்
பேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்

சொத்து தகராறில் தம்பி
வெட்டி கொலைக்கும்
எல்லைத் தகராறில் வீரர்
சுட்டுக் கொலைக்கும்
வித்தியாசம் நிலத்தின் சுற்றளவே
வித்தியாசம் மனத்தின் சுற்றளவே

ஈழத்தில் உன்னினம் எரியும்
பொழுது கொதிக்கும் நெஞ்சுதனை
ஒத்ததே ஒரிசாவில் கிறிஸ்துவனை
எரிக்க கண்ட உலகவ்வினம்

நாடென்பது நிர்வாகத்திற்காய்
பிரித்ததாகும்
மனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு
உரித்தாகும்

சுவாசிக்க காற்றளிக்கும்
கண்டமெல்லாம் என் கண்டமே
நதியின் கரைத்தாலும் உலகக்கடலில்
கலக்கு மென் பிண்டமே