Sunday, February 19, 2006

தேய்பிறை !

அம்மா ! தினமும் நிலாச்சோறு
எனக்கு ஊட்டுகிறாயே

அதற்கும் சிறிது ஊட்டேன் !
பாவம் ! பசியால் தினமும் மெலிந்து வருகிறதே ...
போண்டா

மனிதர் சிலர் இறந்த பின் தான் எண்ணைச்சட்டி !
மனிதர் உண்ணும் உன் பிறப்பிடமே எண்ணைச்சட்டி !!

கொதித்த நல்லெண்ணையால் உன்னுடலில் பெருங்காயம் !
சகித்த உன் நல்லெண்ணத்தால் உயிர் பிழைத்தது வெங்காயம் !!

பாட்டியால் புகழுற்று புத்தகத்தில் இடம்பிடித்தது வடை !
போட்டியாய் உனை போற்றி அதற்கு தருகிறேன் விடை !!

தனியாய் என்றும் வாணலியில் பிறந்ததில்லை !
ஒன்றாய் என்றும் மனிதவாயில் இறந்ததில்லை !!

ஒட்டிய தண்ணீரை ஒதுக்கிவிட்டு எண்ணையை சுமந்தீர்கள் !
பின் எண்ணையை ஒழுகவிட்டு ஆசையை துறந்தீர்கள் !!

சிலருக்கு ! மாலையில் நீதான் சிற்றுண்டி !
அரிதாய் காசு கிடைத்த சிறுவனுக்கு நீயே பேருண்டி !!

இன்று !
உருண்டையாய் உள்ள உன்னை நான் உண்கிறேன் ...

நாளை !
உருண்டையாய் உள்ள உலகம் எனை உண்ணும்......
என்னவளே ! அடி என்னவளே !!

பூவிற்க்கு பின்னால் காய் என்கிறார்கள்..
பூவிற்க்கு பின்னால் பூதான் என்கிறேன் நான் !

என்னவள் தலையில் பூ !!!
பிறந்த நாள்

பிறந்த நாளை கொண்டாட
இயழவில்லை என்னால் !
ஏனெனில் ஒருவகையில்
இறந்த நாள் ! அந் நாள் !!

ஆம் ! என் கருவறைவுலக மரணம்
அன்றுதான் நிகழ்ந்தது...

Thursday, February 16, 2006

அம்மா

காலத்தை வெறுக்கிறேன் !
நான் பிறந்தவுடன் நில்லாமல் போனதற்காக...ஏனெனில்
உன் மடியில் மழலையாகவே வாழ்ந்திருப்பேன்...

கண்ணாடியை வெறுக்கிறேன் !
உன்னால் கிடைத்த சிகையலங்காரம் சிதைந்ததற்காக...

நட்பினை வெறுக்கிறேன் !
உன்னுடன் பழகும் காலம் குறைந்தமைக்காக...

காதலியை வெறுக்கிறேன் !
கனவில் கூட உனை நினைக்க விடாமற் செய்தமைக்காக...

கடைசியில் அம்மா ! உன்னையே வெறுக்கிறேன் !!
என்னை அம்மா ஆகவிடாமல் ஆணாக படைத்ததற்காக...