Thursday, August 03, 2006

குருவிக்கூடு !
























சொந்தமிலா பூமியிலே
சொந்தமான வீட்டினிலே
சோறமுதை உண்டுவிட்டு
தெருவினிலே நடந்து வந்தேன்

கண்களின் வேலையையும்
கால்களிடம் விட்டுவிட்டு
பகலிலே பார்வையின்றி
பலதொலைவு நடந்து வந்தேன்

ஊரொதுங்கி ஆறு போக
ஊரொதுங்கும் ஆறு போனேன்
ஊரழகை ரசிக்க வந்த
ஆறழகை ரசித்திடவே

பாறையொன்று அங்கு உண்டு
அதில் பார்த்து நின்றேன்
புவியழகு கண்டு!
பகலவனின் புகைபடத்திறனை
பனை நிழலாய்
உலரக் கண்டு !

தூக்கு போட்டு சாகும்
துணிவில்லா மனிதர் மத்தியிலே
தூக்கு போட்டு வாழும்
தூக்கனாங்குருவி பனை மரத்தினிலே

ஆடிமாத காற்றினிலே
ஆவணியும் நகர்ந்திடுமே
பாடிவரும் குருவி நீயே
பக்குவமாய் வீடமைத்தாய்

காற்றடிக்கும் திசையறிந்து
பனைமரத்தின் மறுபுறத்தில்
கூட்டினை அமைத்து
வாழும் குட்டிக்குருவியே

உந்தன் அறிவினை
மலைத்து விழுவேன்
மனிதன் சார்பிலே

கடலும்தான் வாசல் தேடாதா ? அதில்
அலைகளும்தான் கோலம் இடாதா ?
அதன் வாசலிலே விட்டைக் கட்டி
அழுது நின்றோம் பிணத்தைக் கட்டி !