Thursday, September 21, 2006

உயிர்மெய் வலிகள்

நால்வகை பருவம் மாறினாலே
தினங் கதறும் உலகமே
நாளையில்லா உருவம் மாறியதால்
தினங் கதறும் எம் உணர்வுகளே !

சரியென்று நினைத்து தவறாய்
போன புணர்ச்சி விதி
பிழையென்றெண்ணி உன் பார்வைச்
செருப்புகளால் வேண்டாம் உணர்ச்சிமிதி !

தாங்கிடுவோம் இயற்கையாய்
உண்டான உடல் ஊனம்
தாங்கோமே செயற்கையாய்
எமக்களிக்கும் மன ஊனம் !

அன்னையின் மார்பிரண்டு
ஆண்பாலாய்,பெண்பாலாய் ஆகியதேன்
அதையருந்தி உயிர் வளர்த்த
நானின்று அரவாணியாய் ஆனதேன் !

என்னினம் தவிர எவ்வினமும்
பார்த்ததில்லை எனை ஏளனமாய்

குறைகள் பலவற்றை செய்தாலும்
நிறையொன்றை நீவீர் செய்தீரே
கழிப்பறை கட்டிப் பிரித்தெம்மை
இயற்கையோடு இணையச் செய்தீரே

உலகின் ஆண்பாதி, பெண்பாதி இல்லாமல்
உடலின் ஆண்பாதி, பெண்பாதி ஆகிருந்தால்
அபலைகளின் கற்பினை விட்டுவிட்டு
அவனையே கற்பழித்து அடங்கிருப்பான் !

புன்னகையை பூக்கவும் வேண்டாம்
அருகருகே அமரவும் வேண்டாம்
நின்றருகே பேசவும் வேண்டாம்
பீச்சாங்கை காசும் வேண்டாம்

இரக்கத்துடன் ஒன்று செய்யும்
இழிபார்வை நிறுத்தது போதும் !

- ஓர் அரவாணியின் ஆதங்கம்

2 comments:

yazhini said...

உலகின் ஆண்பாதி, பெண்பாதி இல்லாமல்
உடலின் ஆண்பாதி, பெண்பாதி ஆகிருந்தால்
அபலைகளின் கற்பினை விட்டுவிட்டு
அவனையே கற்பழித்து அடங்கிருப்பான் !

nalla.......unarvu......

Kirubakar said...

vaarthaigal illai...