Thursday, February 07, 2008

நடைபாதை நிகழ்வுகள் - 1

நடந்து வந்த பாதையில்...
நான்கிதழ் பூ... சிறியதென முகம் சாய்ந்தது
கடந்து சென்ற குழந்தை கத்தியது
அம்மா எவ்வளவு பெரிய 'பூ'

Wednesday, October 31, 2007

மழையினில் நனைகையில் !



குளித்துவந்த மனைவியை மீண்டும்
குளிக்க வைக்கும் கணவனாய்
காய்ந்திருந்த சட்டையை மீண்டும்
நனைத்தது மழை !

அவசரமாய் ஓடுகிறது மேகம்
தவறவிட்ட சில்லரைகளாய் மழைத்துளிகள்
சில்லரைகள் இல்லையென்றால் எல்லாம் கல்லறைதாம்
கல்லறை போகும்போது ஒற்றை சில்லரைதாம்

ஓசோன் ஓட்டையில் ஓலுகையில்
மனிதன்மேல் மனங்கசந்த மழை
சிறுகுழந்தை கைப்பட்டதும்
சிரித்து இறந்தது.

விழும் துளிகளை தட்டிதட்டி
நகைக்குது மழலை
வீழும் துளிகளை தட்டிதட்டி
பறக்குது பறவை
இரண்டும் மழைக்கின்முகம் காட்டுபவை.

அன்று நான் குளித்த அருவி
இன்று மழையில் தனியாய் குளிக்குமோ
இன்றைய என் மனித பிறவி
நாளைய மழையாய் மாறிப் பிறக்குமோ

மை தீர்ந்ததும்
கவிதையை முடித்தேன்
மழை தீர்ந்ததும்
கவிஞனைத் தொலைத்தேன் !

அன்புடன்

ந வ செல்வேந்திரன்.

Friday, July 27, 2007

பெயரில் என்ன இருக்கிறது ?




ஓய்வடையா ஓடை நீ
ஒரு நொடியில் நின்றதேன்

தேங்காய் சுமந்தாடும் தென்னையே
ஆடாமல் அயர்ந்ததேன்

சுட்டெரிக்கும் சூரியனே
சுபாவம் மாறி சொலித்ததேன்

மழைக்கரு சுமக்கும் மேகமே
மாம்ரம் கண்டதும் நின்றதேன்

அவசரமாய் சென்ற நான்
அடியாத்தி நின்றதேன்

ஓவியத்தில் ஓரோரமாய் தீட்டியிருந்த
அவள் பெயரினை மனம்படிக்க
அவளை நினைக்க சொல்லி
பின் அது அடம்பிடிக்க

இப்பெயரினை எங்கு பார்த்தாலும்
இமைக்காமல் இருநொடி நிற்பதேன்
ஆண்டுகள் பலவாயின் சளிக்காமல்
அவள் நினைவு இருப்பதேன்....

அன்புடன்,
செல்வேந்திரன்.

Tuesday, July 10, 2007

கவின் காட்சிக்கொரு இரங்கற்பா !




பலநாள் பெய்திருந்த பெருமழையில்
சிலதாய் மீந்திருந்த சிறுகிளையில்
அப்பொழுதாய் துளிர்த்திருந்த இலைநடுவில்
எப்பொழுதும் சிரித்திருந்த மலரின்மேல்
சமைந்தவளின் சருமத்தை முகர்ந்தவண்டு
மலரின் தேனமுதை சுவைத்ததின்று

விதவிதமாய் தேன்சுவையை கூட்டில்வைத்து
வரவேற்க வாசலிலே காத்திருந்தும்
கண்ணகியிற்பால் காதலுற்ற கோவ(ல)ண்டின்மீது
கொட்டிவிடும் கோபமுற்ற மாதவித்தேனீ

மதி மயங்கும் மாலையிலே
மழை ரசிக்கும் சோலையிலே
அரங்கேறியது அழகான சிலப்பதிகாரம்
அதைரசித்த புற்களின் ஆரவாரம்

திட்டமிட்டு நாடகம்தான் நடந்திருக்க
கோடாரியுடன் நடந்துவந்தான் கொடுங்கோலரசன்
கதைமுடிந்து கண்ணகிதான் எரிக்குமுன்னே
கயவனவன் எரிப்பதற்காய் வெட்டினானே

எரிந்துபோன மதுரையையே மீட்டிவிட்டோம்
எரியப்போகும் மரத்தினை மீட்கலையே
இரக்கபட்டு கோடாரியை இறக்கப்பா
இல்லையேல் இக்கவின்காட்சிக்கோர் இரங்கற்பா !!

Friday, June 29, 2007

விழி !!!



எந்தன் விழியொரு கேள்வி
உந்தன் விழியதன் விடை
விடை கண்ட கேள்வி இறங்கவில்லையே ?
இன்னும் உறங்கவில்லையே :)

Thursday, June 07, 2007

எம்மொழியும் சம்மதம் !



தமிழ்மாதம் தன்னை மறந்துவிட்டு
டிசம்பர் என்ற வார்த்தையினை
திசம்பர் என்று எழுதிவைத்து
தாய்மொழி காத்தோம் ! வாய் முழங்கினார்

படத்தின் பெயருக்கா வரிவிலக்கு
பதிப்பகமொன்றை நிறுவி நடத்து
சிறந்த எழுத்தாளர்களை தத்தெடுத்து
சீரிய தமிழை வீரியமாக்கு

தமிழகத்தில் அயல்மொழியும் கொஞ்சம் பேசு
அயலகத்தில் தமிழைப் பற்றி அதிகம் பேசு
அயலவனும் ஆர்வமாய் கேட்டிடட்டும்
ஆராய்ச்சிக்காய் வேட்டிகட்டி வந்திடட்டும்

எம்மொழியும் சம்மதமெனும் எழதுகோல்
போல் ஆவேனா
வரும்வழியில் வழிகேட்ட அயலவனுக்கு
அவன்மொழியில் வழிதான் சொல்வேனா

பிறமொழி பேசிப் பழகாதவன்
பறவைமொழி எங்ஙனம் கற்றிடுவான்

தாய்மொழியை ஆயுள்வரை வளர்ப்பேனா
பிறமொழியும் முடிந்தவரை கற்பேனா
அடுத்தவீட்டுப் பிள்ளையுடன் விளையாட
அதைக்கண்ட அன்னைத்தமிழும் மகிழ்வாளே

அன்புடன்,
செல்வேந்திரன்

Thursday, April 19, 2007

நீ வருவாய் என !




















தாய்வந்து தேட சிறுவயதில்
ஆடினாய் நீ கண்ணாமூச்சி
நீவந்து சேர ஏங்கியதால்
என்னுடல் இப்படியாச்சி

உடல்விட்டு உயிர்
போனால் பிணமடா
உனைவிட்டு உண்ணாமல்
அழுகிறேன் தினமடா

சொல்லிவிட்டா பிறந்தோமென
சொல்லாமல் போனாயடா
கொள்ளிவைத்து இறந்தேனென
இல்லாமல் போகுமாடா

நீ பிறந்தபின் கணவனுக்குதான்
கடைசி சாப்பாடு
நீ போனதினால் கணவனால்தான்
வாய்க்கரிசி ஏற்பாடோ

பெண்ணாய் நான் பிறந்ததினால்
இரண்டானது வீடெனக்கு
கண்ணா நீ தொலைந்ததனால்
இருண்டுபோனது வாழ்வெனக்கு

பாலூட்டிய மார்பிரண்டும் துடிக்குதடா
சிரிப்பூட்டிய உன்சிறுமுகமும் தெரியுதடா
தினம்தேடி என்னிதயம் வெடிக்குதடா
எந்நாடியும் துடிக்காமல் அடங்குதடா

உந்தன் 'காணவில்லை' சுவரொட்டியை
எந்தன் 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி
மூடுமுன்னே ஓடோடி வந்துவிடு
மூடும்கண்களை மெதுவாய் திறந்துவிடு

அன்புடன்,
ந வ செல்வேந்திரன்

Monday, March 26, 2007

கவிதைப் போட்டி !

அன்புடன் குழுமம் நடத்தும் கவிதைப் போட்டியின் அறிவிப்பு இது...நண்பர்கள் கலந்துக் கொண்டு எங்களை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.உங்கள் நண்பர்களுக்கும் தகவல் தாருங்கள் அவர்களையும் பங்கு கொள்ளச் செய்யுங்கள்

நன்றி

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"

எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-

எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.
--

குழுமம் : அன்புடன்
வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்

Friday, February 23, 2007

பயணங்கள் முடிவதில்லை !






[வீடு]
சட்டென எழுந்தேன் பட்டென போர்வையை விலக்கி.பார்த்தால் பக்கத்தில் தொலைபேசி ! அது அலறியதால் நான் எழுந்தேனா ?
நான் எழுந்ததால் அது அலறியதா ? என அதிகாலையில் ஒரு பட்டிமன்றம்.ஆம் ! நான் இரவு பத்தரைக்கு நானே எழுதிய ஐந்தரை தூக்கு.ம்ம்ம்..என்னை எழுப்பிவிட்டு அது நிம்மதியாய் தூங்க ஆரம்பித்தது.

[
புகைவண்டி நிலையம்]
இரவுப் பேருந்தை இழந்த எனக்கு ஆறுதலாய் அதிகாலை பயணம்.
வழியனுப்ப வந்த அண்ணனிடம் விடைபெற்று
ஒலியெழுப்பி சென்ற இரயிலிடம் கேள்வி கேட்டேன்."எப்படியாவது நேரத்திற்கு சென்றுவிடுவாயா ?".பதிலை செயலில் காட்டியது.

[பயணம்]
உட்கார இடமில்லை என்றால் கூட கவலையில்லை.பயணம் முழுதும் பார்த்து வர ஒரு பெண் இல்லை என்பதுதான் அப்போதைய பெருங்கவலை.கவலையை மறக்க கம்பிகளுக்கு வெளியே பார்வையை செழுத்தினேன்.அங்கே கவலை இறந்து கவிதை பிறக்க ஆரம்பித்தது.

"
கழிவறை கூச்சம் போகவில்லையென‌
இரயிலடி எச்சம் போகவந்த‌
குழுவொன்று செடிமறைவில் செலுத்தினர்
தத்தம் காலைக் கடனை"

"
கூட்டமாய்வந்த குழந்தைகள் பத்தில்
பாதி சென்றது சுள்ளிக்காய்
மீதி சென்றது ப‌ள்ளிக்காய்‍‍‍‍ ‍ அதில்
பாதி சென்ற‌து சோறுக்காய்
மீதி சென்றது ஊருக்காய்"

"
இன்னா செய்தாரை யொறுத்த‌ல் அவ‌ர்நாண‌
ந‌ன்ன‌ய‌ம் செய்து விட‌ல்‍"
"
ப‌திலுக்கு கைய‌சைக்கா விடினும் சிறுகை
ஆட்டிச் சிரித்து விட‌ல்"

"
சோலை கொல்லை பொம்மைக்கு
சேலை க‌ட்டிப் பெண்மைக்கு
வீர‌ம‌ளித்து விரைந்து வ‌ந்தார்
கால‌ம்போன‌ பெண்ணுரிமை பெரிய‌வ‌ர்"

"உப்புத்த‌ண்ணீரை உள்வாங்கி இனிப்பாய்
வ‌ள‌ரும் க‌ரும்புத் தோட்ட‌ம்
சொட்டுச்சாறை சேர்ந்துஉண்டு சுகமாய்
ஊறும் எறும்புக் கூட்ட‌ம்
க‌ட‌ன்கார‌அரிவாள் க‌ழுத்தில் ப‌ட‌விடா
கைஅருவாளுட‌ன் அறுவ‌டைக் கூட்ட‌ம்
காட்சிக்க‌விதை உண்டுஉண்டு குறையா
தெந்தென் இய‌ற்கை நாட்ட‌ம் "

பயணங்கள் முடிவதில்லை ! பயணங்கள் முடிவதில்லை !

ந‌.வ.செல்வேந்திரன்

Monday, December 18, 2006

அம்மா !

இவ்வார்த்தை உச்சரிக்கப் படுகிறதோ ? இல்லையோ
உணரப்படாத உயிரினம் உலகில் இல்லை

மழையாக ! காற்றாக !
கடலாக ! மரமாக !
பனித்துளியாக பிறக்க ஆசைப்பட்டேன்

அவைக்கெல்லாம் தாயில்லை என்ற கணமே
தூக்கியெறிந்தேன் என் அற்ப ஆசையை

இறந்தபின் சொர்க்கமோ ? நரகமோ ?
கவலையில்லை கண்திறக்கும் காலம்வரை
வசித்தது சொர்க்கம்தான்

அம்மா ! உனக்காக நீ வைத்துக் கொண்டது
உன் பெயர் மட்டும்தானா ?
இன்றுவரை அணிகலன் அணியும்

ஆசை உனக்கில்லை ! ஆசை வேண்டாம் இனிமேலும்
தங்கத்திற்கோ ! வைரத்திற்கோ அத்தகுதி இன்னும் வரவில்லை

நீ பின்பற்றும் திருக்குறள் நான்கைந்து
நான் பின்பற்றும் ஒரே திருக்குறள் அது நீயன்றோ

உன் தாய்தந்தை சென்றடைந்தது சொர்க்கமா ? நரகமா ?
கவலை வேண்டாம்..எங்களின் சொர்க்கத்தை படைத்துவிட்டு
அவர்கள் நரகமா ?சென்றிருக்க முடியும்

நத்தை கூட அவ்வப்போது
கூட்டை விட்டு எட்டிப் பார்க்கும்
என்றேனும் ஓர் நாள்
வீட்டை விட்டு உன்மனம் சிந்தித்திருக்குமா

எனக்கான வேலை கிடைத்தவுடன்
உனக்கோய்வு கொடுத்திருப்பேன்
பின்புதான் யோசித்து அமைதியானேன்
அலுவலகம் இன்னுமோர் பிறந்த வீடல்லவா..

வேலைச்சுமையுடன் வீட்டுச்சுமையையும் கரைத்த இடமல்லவா !

முப்பத்தெட்டு ஆண்டுகளில்
முடிவடைந்தது உன் பணிக்காலம்
விடுமுறையில்லா பணியொன்று
நீ தொடர காத்திருக்கிறது
தாய்மையை தவிர வேறென்ன என் தாயே !


காலத்தின் கட்டளைக்கெல்லாம் கீழ்படியாதே
முதுமை ! இனி காலத்திற்கு மட்டும்தான்

ஊட்டி வளர்த்த மரத்தை
தாங்குமாம் ஆலவிழுதுகள்
விருதுகள் பலபடைக்காவிட்டாலும்
விழுதுகளாய் வாழ்ந்திடுவோம்

உன் சிம்மாசனத்தின் நான்கு
கால்கள் இனி நாங்களே


உன்னுடலை ஓர்நாள் மண்மூடும்
ஒரு அறை ! அந்த கருவறை திறந்து மட்டும் காத்திரு
கண்டிப்பாய் ஓர்நாள் நானும் வந்து சேர்வேன்..



Friday, November 10, 2006

கவிதை எழுத வருவதில்லை !













அண்ணன் மழலையை கொஞ்சும்போது

அன்றைய மழையை கொஞ்சிக்

கவிதை எழுத வருவதில்லை !

உறவுடன் ஒன்றாய் உண்ணும்போது

கொரிக்கும் அணிலின் அழகுகண்டு

கவிதை எழுத வருவதில்லை !

கடுங்குளிரில் முகம்போர்த்தி உறங்காமல்

முகமூட மேகமிலா நிலாக்கண்டு

கவிதை எழுத வருவதில்லை !

ஐந்துநாள் அழுவலக ஐக்கியத்தில்

ஆறாம்நாள் சிந்தித்துச் சிலவரி

கவிதை எழுத வருவதில்லை !

கவிஞனாய் வாழ நினைத்தாலும்

கடமையில் மூழ்கி உழைக்கும்போது

கவிதை எழுத வருவதில்லை !

ஒரு கவிதை எழுத வருவதில்லை !



Friday, November 03, 2006

அன்னை














ஆர்வமா யமர்ந்தேன் அறையினிலே
அன்னைக்காய் ஓர் கவிதையெழுத‌
'அன்னை' தலைப்பெழுதி அடுத்தவரி
எழுதுமுன் அறைக்குள் அம்மா !

தாங்காதடா தாயின்மனம்
உன்னோட கண்ணுக்கும்
என்னோட கண்ணுனக்கும்
ஏதும் ஆகுமென்றால்

அவளேற்றிய விளக்கையும்
என்‍தலைகோதிய வலக்கையும்
பார்த்து பார்த்து ஆழ்ந்தது
என்மனம் சிலகணம்

முதல்வரிக்காய் மீண்டும் மூழ்கியபோது
மீண்டும் அறைக்குள் அம்மா

வேர்க்குதாப்பா ? என்றாள்
என் வியர்வையை துடைத்தபடி
வேர்க்கலம்மா ? என்றேன்
என் வியர்வையை மறைத்தபடி

முதல்வரிக்காய் மீண்டும் மூழ்கியபோது
மீண்டும் அறைக்குள் அம்மா

ப‌திய‌ம் போட்ட‌ செடியும்,
ம‌தியம் சாப்ட‌ வ‌யிரும்
காய‌க்கூடாதுடா கைக‌ழுவு
சீக்கிர‌ மென்றாள்.

வ‌யிறாற‌ உண்டுவிட்டு தாயின்
ம‌டியாற‌ த‌லை சாய்த்தேன்
'அன்னை' த‌லைப்பு ம‌ட்டுமே
க‌விதையாய் அக் காகித‌த்தில்..

அன்புடன்
ந‌ வ‌ செல்வேந்திர‌ன்

Saturday, October 14, 2006

புறப்படுடி என் பொண்டாட்டியே !

பதினாலு வருசத்துக்கே
புராணம்தான் பொங்குதடி
பரம்பரையா வாழுறோமே
பிராணனைதான் போகுதடி

சிங்கம் புலி கரடி கூட‌
பட்டணம்தான் போகுதடி
வேடிக்கை காட்டிவிட்டு
கூண்டுக்குள்ளே தூங்குதடி

புளிமூட்டை கணக்கா நாம
பூச்சிக‌டியில் வாழுறோம்டி
எலிவேட்டை இனிபோதும்
எந்திரிச்சி கூட‌ வாடி

ச‌லுகையெல்லாம் அர‌சாங்க‌ம்
கொடுத்துத்தான் பார்குதடி
மூக்கொலுகும் புள்ளைய‌த்தான்
முன்னேத்த‌ கூட‌வாடி

காடு,மலை அருவியெல்லாம்
பத்திரமா இருக்குமடி
கால்வலிக்க நடந்து போயி
காலைக்குள்ள சேர்வோமடி

ந‌க‌ர்ந்தாதான் ந‌க‌ர‌ம்
இப்ப‌ வ‌ரும்
ந‌க‌ர‌ல‌னா நாக‌ரீக‌ம்
எப்ப‌ வ‌ரும்

எப்பாடு ப‌ட்டாவது
எழுந்துரிச்சி நிப்போம‌டி
இழிசாதிக்கு பொற‌ந்த‌ ப‌யலை
இனிசாதிக்க‌ வைப்போம‌டி

Thursday, September 28, 2006

நினைவுகள் வலியவை ! நினைவுகள் வலி அவை !












நிகழ்கால நினைவுகளுக்கே
நித்தம் கதறுகின்றேனே
எதிர்கால நிகழ்வுகளுக்கு
சித்தம் சிதறிடுவேனோ

காலம் கடந்து
மணம் முடித்தபின்
கலவியில் உந்தன் முகமும்..

பத்தாண்டு பின்பார்க்கும்
பழைய பெட்டியில்
உந்தன் புகைப்படமும்...

நிமிரயியலா வயதினிலே
நியாவிலை கடைவாசலிலே
அடையாள அட்டையில் இல்லாத
உந்தன் பெயரும்...

சாதல் அனுபவிக்கும் வயதில்
காதல் அனுபவம் கேட்ட பேரப்
பிள்ளைகளுக்கான என் பதிலும்...

நிகழ்கால நினைவுகளுக்கே
நித்தம் கதறுகின்றேனே
எதிர்கால நிகழ்வுகளுக்கு
சித்தம் சிதறிடுவேனோ

Thursday, September 21, 2006

உயிர்மெய் வலிகள்

நால்வகை பருவம் மாறினாலே
தினங் கதறும் உலகமே
நாளையில்லா உருவம் மாறியதால்
தினங் கதறும் எம் உணர்வுகளே !

சரியென்று நினைத்து தவறாய்
போன புணர்ச்சி விதி
பிழையென்றெண்ணி உன் பார்வைச்
செருப்புகளால் வேண்டாம் உணர்ச்சிமிதி !

தாங்கிடுவோம் இயற்கையாய்
உண்டான உடல் ஊனம்
தாங்கோமே செயற்கையாய்
எமக்களிக்கும் மன ஊனம் !

அன்னையின் மார்பிரண்டு
ஆண்பாலாய்,பெண்பாலாய் ஆகியதேன்
அதையருந்தி உயிர் வளர்த்த
நானின்று அரவாணியாய் ஆனதேன் !

என்னினம் தவிர எவ்வினமும்
பார்த்ததில்லை எனை ஏளனமாய்

குறைகள் பலவற்றை செய்தாலும்
நிறையொன்றை நீவீர் செய்தீரே
கழிப்பறை கட்டிப் பிரித்தெம்மை
இயற்கையோடு இணையச் செய்தீரே

உலகின் ஆண்பாதி, பெண்பாதி இல்லாமல்
உடலின் ஆண்பாதி, பெண்பாதி ஆகிருந்தால்
அபலைகளின் கற்பினை விட்டுவிட்டு
அவனையே கற்பழித்து அடங்கிருப்பான் !

புன்னகையை பூக்கவும் வேண்டாம்
அருகருகே அமரவும் வேண்டாம்
நின்றருகே பேசவும் வேண்டாம்
பீச்சாங்கை காசும் வேண்டாம்

இரக்கத்துடன் ஒன்று செய்யும்
இழிபார்வை நிறுத்தது போதும் !

- ஓர் அரவாணியின் ஆதங்கம்

Thursday, September 07, 2006

நீ தமிழே !

நீ தமிழே ! இதை
விளக்கும் என் தமிழே

உன்னால் என்னுயிர் வாழும்
என்னுயிர் நீ ! ஆதலால்
என் மெய்யும் வாழும்

உயிர், மெய் வாழத்
தேவை தமிழே !
என் உயிர், மெய்
வாழத் தேவை நீ தமிழே !!

Monday, August 28, 2006

இதுதான் காதலோ !




















அன்று பகல் முழுதும் அதிகமாய் வெயில் பெய்துவிட்டதால் அதற்குப்
போட்டியாய் மாலை நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது..

திடீர்மழை கண்டு அனைவரும் மறைவிடம் தேட
அவன் மட்டும் சாலையில் நடக்க ஆரம்பித்தான்..

தான் கழுவிவிடும் தார்ச்சாலையை இவன் நடந்து
அழுக்காக்கியதற்காய் கோபித்த மழைத்துழிகள்
அவன் தலையை கொட்டித் திட்டத் தொடங்கின….

உடல் கருப்பாய் இருந்தாலும் அழுகுப்பெண்
கைப்பிடித்ததால் தலைக்கு மேல் ஆட்டம்
போட்டபடியே போனது ஒரு குடை..

கல்யாணத்திற்கு வரச்சொன்னால் காதுகுத்துக்கு வந்த கதையாய்
இருப்பதாக தன்மேல் பொழிந்த மழையினை
சலித்தது ஒரு வைக்கோல் குவியல்...

“காலையில் வீட்டுக்காரன் தண்ணிர் இல்லை எனத்திட்டுவானே”
இளநியில் மழை நீர் கொஞ்சம் நிரப்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தது
ஒரு தெருக்கோடி தென்னை மரம்...



வாசலில் தேங்கிய நீரைக் கண்டு கணவன் எப்படி வருவாரோ ?
எனக்கவலை ஒருபுறமும், காலையில் கோலம் போட வேண்டாம் என்ற சிறுமகிழ்ச்சி
ஒரு புறமும் கொண்டு நின்றிருந்தாள் தெருவினிலே உள்ள பெண்ணொருத்தி…


"மரம் ஒழுகுதுன்னா… கேக்குறீங்களா "..
சீக்கிரம் வேறு வீடு பாருங்க
என ஆண்காகத்தை திட்டியது அதிகார பெண்காகம்..

பகல் முழுதும் அழுக்கை ஆடையாய் அணிந்திருந்த மர இலைகள்
யாரும் கவனிக்கவில்லை என ஆடையை களைந்துவிட்டு குளித்துக்
கொண்டிருந்தன..இவனை கண்டதும் வெட்கத்தில் தலை குனிந்தன

இவ்வளவு நிஜங்கள் கண்முன்னே நிகழ்ந்தாலும்
அதையெல்லாம் கடுகளவும் கண்டுகொள்ளாமல்
பகல் முழுதும் அவளுடன் பேசியிருந்தும்,
இரவு பேசப் போவதை நினைத்து கற்பனை செய்தபடியே
சாலையில் சாவகாசமாய் நடந்திருந்தான்...

Thursday, August 03, 2006

குருவிக்கூடு !
























சொந்தமிலா பூமியிலே
சொந்தமான வீட்டினிலே
சோறமுதை உண்டுவிட்டு
தெருவினிலே நடந்து வந்தேன்

கண்களின் வேலையையும்
கால்களிடம் விட்டுவிட்டு
பகலிலே பார்வையின்றி
பலதொலைவு நடந்து வந்தேன்

ஊரொதுங்கி ஆறு போக
ஊரொதுங்கும் ஆறு போனேன்
ஊரழகை ரசிக்க வந்த
ஆறழகை ரசித்திடவே

பாறையொன்று அங்கு உண்டு
அதில் பார்த்து நின்றேன்
புவியழகு கண்டு!
பகலவனின் புகைபடத்திறனை
பனை நிழலாய்
உலரக் கண்டு !

தூக்கு போட்டு சாகும்
துணிவில்லா மனிதர் மத்தியிலே
தூக்கு போட்டு வாழும்
தூக்கனாங்குருவி பனை மரத்தினிலே

ஆடிமாத காற்றினிலே
ஆவணியும் நகர்ந்திடுமே
பாடிவரும் குருவி நீயே
பக்குவமாய் வீடமைத்தாய்

காற்றடிக்கும் திசையறிந்து
பனைமரத்தின் மறுபுறத்தில்
கூட்டினை அமைத்து
வாழும் குட்டிக்குருவியே

உந்தன் அறிவினை
மலைத்து விழுவேன்
மனிதன் சார்பிலே

கடலும்தான் வாசல் தேடாதா ? அதில்
அலைகளும்தான் கோலம் இடாதா ?
அதன் வாசலிலே விட்டைக் கட்டி
அழுது நின்றோம் பிணத்தைக் கட்டி !

Sunday, July 23, 2006

விதவை !

வெள்ளைக் காகிதத்தில் ஒற்றையாய்
ஓர் கவிதை ! வாசகன் இல்லாமல்.

வீட்டிலுள்ள தலைவன் புகைப்படம் கூட
அவன் நினைவினை அதிகமாய் தீண்டியதில்லை..

சாலையோர பூக்கடையும்,
சேலையோர சிறுமுடிச்சும்,
காலை நேர கடுங்குளிரும்,
மாலை நேர காத்திருப்பும்

கண்டு கொல்லும், கண்டு கொள்ளா(த)
முடிச்சவிழ்ந்த மொட்டை

அடுத்த மாத மண அழைப்பிதழ்கள்
அடுக்களையில் அழ வைக்கும்..

ஆடி மாதம் ஆண்டுகளாய் ஆகி
படுக்கையிலே முகம் நனைக்கும்

நெறி தவறா நடந்தாலும்
நெடியுடைய ஊர் பேச்சை
தாரை மிதித்து நடந்திடுவாள்
ஊரை சகித்து தலை நிமிர்வாள்

கை முளைத்து, கால் முளைத்து
கடைக்கு செல்ல தந்தைக்காய்
காத்திருக்கும் குழந்தை உள்ளம்
தாயிடமே கேட்டிடுமே ! செத்திடுவாள் சில நிமிடம்...



பிள்ளையினை வழியனுப்பி
தொல்லைகளை தனுள் அமிக்கி
நேரம் வரக் காத்திருந்து
பிள்ளைக்கு மணம் முடிப்பாள்

குழந்தைகள் காதல் செய்யும் முதலிரவில்
மனமும், உடலும் ஒன்றாய்
கட்டிலில் உறங்கும்
அவளுக்கும் அது மீண்டதோ(மோ)ர் முதலிரவு !!


அன்புடன்,
செல்வேந்திரன்.

Saturday, July 08, 2006

[காட்சி - அருவி விழும் பாறையில் அழகி அமர்ந்திருக்கிறாள் ]

அழகற்ற அருவி அமர்ந்து அமர்ந்து..
அழகற்று போன என் மேல் அமர்ந்து
அழகாய் ஆக்கிய அழகியே !

சீக்கிரம் எழுந்துவிடு !
பனியாய் நான் உருகுவதற்கு முன் !!

நான் உருகிவிட்டால் அருவிகள்
ஆறாய் ஆகி உன்னை அள்ளிச்
சென்றிடுமோ என்ற அச்சத்தில்
கல்லாய் அமர்ந்திருக்கிறேன் !!