Tuesday, April 19, 2011

பூ - மனிதத்தின் அடையாளம்



ஐந்து இறந்து பிறந்தாலும்
ஆறாவதை அயராமல் சுமக்கும்
தாய்போல 
அடிக்கடி நிலம் பிளந்தும்
அவர்கள் சாடி ஓடவில்லை
வேறு நிலம் தேடி வாழவில்லை

காலிழந்தும் கையிழந்தும்
வலியிழந்தும் வாளிழந்தும் 
எதிரியை மீண்டும் போரிட
அழைக்கும் போராளியாய் 
நிலம் விரித்தும்
கடல் புகுந்தும்
வரிசையில் உணவிற்காய் வரம்பு மீறியதில்லை
வீடிழந்தவரை வீதியில் உறங்க விட்டதில்லை.

அணுகுண்டுகளால் அழித்த அமெரிக்காவிற்கு
பூமரங்களை பரிசாய் அளித்தார்கள்
தடமில்லாமல் அழிந்த இடத்தை
அமைதியின் நகரமாய் ஆக்கினார்கள்

கடும்பனியால் இலைகள் இழந்தாலும்
கிளைமுழுதும் பூக்களை முதலில்
பூக்கும் இம்மரங்கள் அப்பூமியில் 
தோன்றியதில் ஆச்சர்யமில்லை...

Friday, April 08, 2011

என்று அழியும் இந்த ஊழலின் மோகம் !!





தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடு என்றான்
பாட்டன் எங்கள் பாரதி

தனியொரு மனிதனாய் உண்ணாமல்
ஊழலை அழிக்க இதோ !
தாத்தா நீ ஹசாரே 

எதிரியிடமிருந்து நாட்டை காக்க
அன்றணிந்தாய் இராணுவ உடை
ஊழலிலிருந்து நாட்டை மீட்க
இன்றணிகிறாய் வெள்ளை ஆடை
நல்ல வேளை ! ஆம் ராணுவ உடைகளை
குண்டுகள் எளிதில் துளைக்கின்றனவாம்

ஒரு வங்கியில் கூட உனக்கு கணக்கிலை
ஊழலுக்கு சுவிஸ் வங்கிகளில் இடம் போதவில்லை

விவேகானந்தரால் விழித்தவன் நீ !
உன்னால் உணர்ந்தோம் நாங்கள் !!

உன் பசித்த உடலுக்கு
சட்டத்தால் சாதம் ஊட்டும் வரை
எட்டு திக்கும் குரல் கொடுப்போம்
ஏறுகொண்டு ஊழலை ஒழிப்போம்