
சுகமாய் பறந்தவன் வீழ்ந்தான் விமானத்திலிருந்து
கோளாறு என்னவென யோசிக்கும் முன் பார்த்தால் கீழாறு
தரையில் கூட இவ்வளவு அழகாய் ! அதிகமாய்
குட்டிக்கரணங்கள் அடித்திருக்க முடியாது
அவன் விழ்ந்த வேகம் பார்த்த
மேகமும் விலகி ஓடியது
பூமியில் வீழும் அவன் நிழலை பிடிக்கவா
வேகமாய் ஓடுகிறான் என்றபடியே வெயிலில்
மெதுவாய் நகர்ந்தது சூரியன்....
சூரியனின் உள்மனதில் இன்னொரு எண்ணமும் ஊஞ்சலாடியது
கொடுத்து வைத்தவன் நிழல் அவனுக்குண்டு ...
நமக்கில்லையே எண்ணியது ஏக்கமாய்..
காற்றின் பெருமை அன்றுதான் புரிந்தது.
வீழும் வரையாவது உயிர் வாழட்டுமென
முகத்தில் மோதியபடி வந்தது...
விலகி போனாலும் மனம் தாளா மேகம்
வீட்டை விட்டு ஓடிய மகனை நினைத்த தாய்
போல் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது
ஆற்றின் ஆழம் அதிகமாக இருந்ததால்
அவன் ஆயுளின் நீளம் அதிகமாக இருந்தது..
திரவத்தில் வீழ்ந்தாலும் திடமாய் இருந்தது அவன் மனது ..
உயிர் பிழைப்போமென..
சுடும் காற்றில் வந்த கதகதப்பாலும்
ஆற்றில் நனைந்த சொதசொதப்பாலும்
மயக்கம் உறக்கமாய் மாறியது
கரை ஒதுங்கினான் ஒரு வழியாக..அவ்வழியில்
பலர் வந்தாலும் அவனை யாரும் கண்டுகொள்ள வில்லை.
கதாநாயகியாக இருந்திருந்தால் வந்தவர்களெல்லாம்
கதாநாயகர்களாகி இருப்பார்கள்.
அவன்தான் நம் கதையின் நாயகன் ஆயிற்றே
ஆற்றினருகே உள்ள குழியில்
அவனையறியாமல் வீழ்ந்து விட்டான்.
இவன் கண் விழித்ததும்
வெளிச்சம் கண் மூடிக் கொண்டது
தந்தை பணிக்கு சென்றது பணியாத பிள்ளைகள் போல
சருகுகள் அங்குமிங்கும் பறந்தன..
இத்தனிமை சிறைவாசம் எத்துனை மணித்துளிகள்
எத்துனை நாழிகைகள் என்றே தெரியவில்லை அவனுக்கு
இருட்டு இவ்வுலகை ஆக்ரமிக்கும் போட்டியாக
அக்குழியை ஆக்ரமித்தது ஆற்றின் ஓரமாய் ஒழுகிய நீர்
பசித்த அவனுக்காக பாட்டு பாட
பாரதியார் இல்லையங்கே ஜகத்தினை அழிக்க வேண்டாம் !
தாகத்தையாவது தீர்ப்போமென
தண்ணீரை தீர்க்க ஆரம்பித்தான்
குழிஎங்கும் நீர் பரவியது போல்
அவன் உடலெங்கும் வழி பரவியது
உடலெங்கும் வீக்கம் ! உயிர் வாழும் ஏக்கம்
உடனே அக்குழியை விட்டு வெளியேற துடித்தான்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமது போல
தண்ணீர் கரைத்து கரைத்து திட மண்ணும் சேறாய் மாறியது
அதனுள் புதைந்த அவன் கால்கள்
மண்ணுள் புதைந்த வேர் போல மறைந்தது
பலநாள் முயற்சியின் பலனாய் குழியை விட்டு
முதலில் வந்தது தலை
விதையை விட்டு வந்த முதல் இலை
சுதந்திர போராட்டம் கூட சீக்கிரம் முடிந்திருக்கும்
அவ்வுயிர் வெளிவரும் போராட்டம் தொடர்ந்து
கொஞ்சம் கொஞ்சமாய் அவன் உடலும்
அவன் கிளைக்கைகளும் மேலே வந்தன..
வழுவிழந்தவனை வம்பிற்கு இழுப்பது போல் வீசியது காற்று
காதலியின் சொல்லுக்கு தலையாட்டும் காதலனை போல்
காற்றின் சொல்லுக்கு தன்னுடலை ஆட்டினான்...
தூரத்திலிருந்து பார்த்தால் சிறு செடி ஆடுவதாய் நம்பிருப்பார்கள்
முயன்று முயன்று நீட்டினான் மரக்கிளைகளாய் கைகளாய்
சூரியனும் , சந்திரனும் இதை தினம் தினம் பார்த்தாலும்
சந்திக்கும் பொழுது பேசுவதற்காக நிகழ்ச்சிகளை
சேமிக்கும் காதலர்களாய் காத்திருந்தார்கள்..
அவன் கைகளில் அமைதியாய்
வந்தமர்ந்தது ஒரு கருங்காகம்
காகம் கொத்தியதால் அவன் விரல் நுனிகளில் வீக்கமா ?
இவன் விரல் நுனி வீக்கங்களை காகம் கொத்தியதா ?.........
பொறுத்திருந்தது போதுமென முடிவெடுத்தது காகம்
சுட்ட பாட்டியும் ! சுட்ட வடையும் !! இல்லாததால்
விரல் நுனி வேப்பம்பழத்தினை கவ்வியபடியே பறந்தது...
.........
..................
................................
........................................
சுகமாய் பறந்தவன் வீழ்ந்தான் விமானத்திலிருந்து
கோளாறு என்னவென யோசிக்கும் முன் பார்த்தால் கீழாறு
[வேப்ப மரத்தின் சுழற்சி..ஒரு கற்பனை கதையாக]