
ஒரு தாய் வயிறானாலும்
வெவ்வேறு நிறத்தில் குழந்தைகளாய்
நிலத்தாய் வளர்க்கும்
மரங்கள் வண்ணக் கலவைகளாய்
எழுவண்ண வானவில்லின் வண்ண
அம்புகளாய் கூர்மரங்கள்
மணிக்கணக்கில் மனங்குளிர
மஞ்சள் வெயில் நிறமரங்கள்
நிறப்போட்டியில் நின்று தோற்று
மரந்தள்ளி மண்வந்த பச்சோந்தி ஒன்று
காய்ந்த இலை மிதித்து
காயந்தனை ஆற்றியது
நிழல்கசியும் மரத்தின் கீழ்
நிலங்கசியும் வேரின் மேல்
நிறங்கசியும் இலைகளைக் கண்டு
நீர்கசிய குளித்தேன் இன்று
நிறம் பேசிய மனிதர்தனை
வெறுத்த மனம்
நிறம் பூசிய மரங்கள் தனை
ரசித்ததின்று ! முழுதாய் மறந்து நின்று !!