
[வீடு]
சட்டென எழுந்தேன் பட்டென போர்வையை விலக்கி.பார்த்தால் பக்கத்தில் தொலைபேசி ! அது அலறியதால் நான் எழுந்தேனா ?
நான் எழுந்ததால் அது அலறியதா ? என அதிகாலையில் ஒரு பட்டிமன்றம்.ஆம் ! நான் இரவு பத்தரைக்கு நானே எழுதிய ஐந்தரை தூக்கு.ம்ம்ம்..என்னை எழுப்பிவிட்டு அது நிம்மதியாய் தூங்க ஆரம்பித்தது.
[புகைவண்டி நிலையம்]
இரவுப் பேருந்தை இழந்த எனக்கு ஆறுதலாய் அதிகாலை பயணம்.
வழியனுப்ப வந்த அண்ணனிடம் விடைபெற்று
ஒலியெழுப்பி சென்ற இரயிலிடம் கேள்வி கேட்டேன்."எப்படியாவது நேரத்திற்கு சென்றுவிடுவாயா ?".பதிலை செயலில் காட்டியது.
[பயணம்]
உட்கார இடமில்லை என்றால் கூட கவலையில்லை.பயணம் முழுதும் பார்த்து வர ஒரு பெண் இல்லை என்பதுதான் அப்போதைய பெருங்கவலை.கவலையை மறக்க கம்பிகளுக்கு வெளியே பார்வையை செழுத்தினேன்.அங்கே கவலை இறந்து கவிதை பிறக்க ஆரம்பித்தது.
"கழிவறை கூச்சம் போகவில்லையென
இரயிலடி எச்சம் போகவந்த
குழுவொன்று செடிமறைவில் செலுத்தினர்
தத்தம் காலைக் கடனை"
"கூட்டமாய்வந்த குழந்தைகள் பத்தில்
பாதி சென்றது சுள்ளிக்காய்
மீதி சென்றது பள்ளிக்காய் அதில்
பாதி சென்றது சோறுக்காய்
மீதி சென்றது ஊருக்காய்"
"இன்னா செய்தாரை யொறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
"பதிலுக்கு கையசைக்கா விடினும் சிறுகை
ஆட்டிச் சிரித்து விடல்"
"சோலை கொல்லை பொம்மைக்கு
சேலை கட்டிப் பெண்மைக்கு
வீரமளித்து விரைந்து வந்தார்
காலம்போன பெண்ணுரிமை பெரியவர்"
"உப்புத்தண்ணீரை உள்வாங்கி இனிப்பாய்
வளரும் கரும்புத் தோட்டம்
சொட்டுச்சாறை சேர்ந்துஉண்டு சுகமாய்
ஊறும் எறும்புக் கூட்டம்
கடன்காரஅரிவாள் கழுத்தில் படவிடா
கைஅருவாளுடன் அறுவடைக் கூட்டம்
காட்சிக்கவிதை உண்டுஉண்டு குறையா
தெந்தென் இயற்கை நாட்டம் "
பயணங்கள் முடிவதில்லை ! பயணங்கள் முடிவதில்லை !
ந.வ.செல்வேந்திரன்