
அன்று பகல் முழுதும் அதிகமாய் வெயில் பெய்துவிட்டதால் அதற்குப்
போட்டியாய் மாலை நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது..
திடீர்மழை கண்டு அனைவரும் மறைவிடம் தேட
அவன் மட்டும் சாலையில் நடக்க ஆரம்பித்தான்..
தான் கழுவிவிடும் தார்ச்சாலையை இவன் நடந்து
அழுக்காக்கியதற்காய் கோபித்த மழைத்துழிகள்
அவன் தலையை கொட்டித் திட்டத் தொடங்கின….
உடல் கருப்பாய் இருந்தாலும் அழுகுப்பெண்
கைப்பிடித்ததால் தலைக்கு மேல் ஆட்டம்
போட்டபடியே போனது ஒரு குடை..
கல்யாணத்திற்கு வரச்சொன்னால் காதுகுத்துக்கு வந்த கதையாய்
இருப்பதாக தன்மேல் பொழிந்த மழையினை
சலித்தது ஒரு வைக்கோல் குவியல்...
“காலையில் வீட்டுக்காரன் தண்ணிர் இல்லை எனத்திட்டுவானே”
இளநியில் மழை நீர் கொஞ்சம் நிரப்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தது
ஒரு தெருக்கோடி தென்னை மரம்...
வாசலில் தேங்கிய நீரைக் கண்டு கணவன் எப்படி வருவாரோ ?
எனக்கவலை ஒருபுறமும், காலையில் கோலம் போட வேண்டாம் என்ற சிறுமகிழ்ச்சி
ஒரு புறமும் கொண்டு நின்றிருந்தாள் தெருவினிலே உள்ள பெண்ணொருத்தி…
"மரம் ஒழுகுதுன்னா… கேக்குறீங்களா "..
சீக்கிரம் வேறு வீடு பாருங்க
என ஆண்காகத்தை திட்டியது அதிகார பெண்காகம்..
பகல் முழுதும் அழுக்கை ஆடையாய் அணிந்திருந்த மர இலைகள்
யாரும் கவனிக்கவில்லை என ஆடையை களைந்துவிட்டு குளித்துக்
கொண்டிருந்தன..இவனை கண்டதும் வெட்கத்தில் தலை குனிந்தன
இவ்வளவு நிஜங்கள் கண்முன்னே நிகழ்ந்தாலும்
அதையெல்லாம் கடுகளவும் கண்டுகொள்ளாமல்
பகல் முழுதும் அவளுடன் பேசியிருந்தும்,
இரவு பேசப் போவதை நினைத்து கற்பனை செய்தபடியே
சாலையில் சாவகாசமாய் நடந்திருந்தான்...