
Friday, March 31, 2006
Wednesday, March 29, 2006

பிறந்த நாளெனினும்
இன்பமில்லை எனக்கு !
காரணம் கேட்டால்
கண்ணீர்தான் வருகிறது !
ஆண்டொன்றும் ஆகிட்டதே
அக்கொடுமை நிகழ்ந்து !!
அன்றுதான் எனை பாதித்த !
என்னால் பாதித்த ஒரு மரணம்
"புத்தாடை உடுத்தியவனை புதிதாய்
கோயிலுக்கு செல் " என்றதாலென தாயும்..
"சாவியை கொடுத்துவிட்டு
சாவகாசமாய் வா" என்றதாலென தந்தையும்..
"விரைவாய் வீடு திரும்பு" என
வீதியிலே உரைத்ததாலென அக்காவும்..
அலறிய பொழுது ! பேசமுடியா
பெருங்குற்றவாளி நானல்லவோ !!
உறக்கமில்லை இன்று வரை
உடலாய் இருந்தவன் இறந்ததிலிருந்து...
பெற்ற கடனை பற்றி புலம்பியவர்களிடம்
விற்ற கடனை பற்றி பேச வந்தார்கள் !!
"அவந்தானே எங்கள் கடைக்குட்டி
அடைத்திருப்பானே உங்கள் வட்டி "
"கௌரவத்தை விற்று கடனை வாங்கினோம்
விலைக்கெங்களை விற்று வேலைதனை வாங்கினோம்"
வேலையில் சேரும் முன்னே ! அவன் சேரும்
வேளை வந்ததே !!
வருடம் ஒன்றிற்கே வலிக்கிறதே
வாழ்க்கை முழுதும் எப்படி !!
உயரமாய் புகைபடம் மாட்டத் தெரியாதவனை
உயரத்தில் புகைபடமாய் மாட்டியவன் நானே !!!
இறந்தவன் யார் தெரியுமா ??
என்னுடன் பிறந்தவன் ! என்னுடம்பாய் பிறந்தவன் !!
ஒரு நொடியில் வேகத்தை முறுக்கி வைத்து
மறு நொடியில் ஆயுளை முடித்து வைத்தேன் !!
எவனையோ முந்த நினைத்து
எமனையே முந்த விட்டேனே !!
மூடினால் முடிக்குள் காற்று புகாதாம்
மூச்சே புகாமல் போயிற்றே !!!
அரைமணி சுமையை தவிர்க்க நினைத்து
ஆயுள்வரை சுமையாய் ஆனேனே !!
தலைகவசம் அணியாததலேதான்
எனக்கின்று தவசம் !!
சோம்பலாய் அணிய மறுத்தவன்
சாம்பலாய் ஆனேனே !!
வேண்டாம் ! வேண்டாம் !
வேண்டாதார்க்கும் வேண்டாம் இந்நிலைமை !!
அற்பமாய் ஆயுளை முடித்துவிட்டு
ஆவியாய் திரியாதே !
உன்னால் வாழ்பவர்களை
உயிர்ப்பிணமாய் ஆக்காதே !!
- அழுகையுடன் ஒரு ஆவி
[Please wear helmet ]
Wednesday, March 01, 2006
Subscribe to:
Posts (Atom)